ஊழல் மோசடிக்குப் பெயர் போன கடந்த ஆட்சிக் காலங்களை விட பாரதுரமான மோசடிகளில் எமது அரசாங்கம்..!

0

ஊழல் மோசடிக்கு பெயர் போன ஜே.ஆர்,ஜயவர்தன, பிரேமதாஸ, சந்திரிக்கா மற்றும் ரணில் ஆகியோரது ஆட்சிக்காலத்தை காட்டிலும் பாரதுரமான மோசடிகளில் எமது அரசாங்கம் ஈடுப்பட்டுள்ளது என்பதை பெரும் மனவேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைச்சு பதவிகளை வகித்துக் கொண்டு அரசாங்கத்தின் தவறான தீர்மானங்கள் அனைத்திற்கும் தலையாட்டிக் கொண்டிருந்தால் எதிரகால தலைமுறையினர் எம்மை விமர்சிப்பார்கள்.

நாட்டுக்காக அமைச்சு பதவிகள் மற்றும் அனைத்தையும் துறக்க தயார் என்பதை அமெரிக்காவின் முகவரிற்கு தெரிவித்துக் கொள்கிறோம். நாட்டை பாதுகாக்கும் எமது போராட்டத்திற்கு அனைவரும் எம்முடன் ஒன்றினைய வேண்டும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.


யுகதனவி மின்நிலைய பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு அரசாங்கத்தின் 11 பிரதான பங்காளி கட்சியினர் ஒன்றினைந்து நேற்று முன்தினம் கொழும்பில் ‘மக்கள் பேரவை’ மாநாட்டை நடத்தினர். அந்நிகழ்வில் உரையாற்றுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசாங்கத்தில் இருந்துக் கொண்டு,அமைச்சரவை தீர்மானத்திற்கு எதிரான போராட்டம் அல்லது வலு சக்தி அமைச்சராக இருந்து கொண்டு வலு சக்தித்துறை அபிவிருத்தி தொடர்பிலான அமைச்சரவை தீர்மானத்திற்கு எதிராக போராட்டம். இது ஒழுக்கமானதா, அமைச்சரவை கூட்டுப் பொறுப்பிற்கு என்ன நேர்ந்தது என பலர் வினவலாம்.

30 வருடத்திற்கு முன்னர் அதாவது 1990 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்த காமினி திஸாநாயக்க, லலித் அத்துலத்முதலி, ஜி.எம் பிரேமசந்ர ஆகியோர் அரசாங்கத்திற்கு எதிராக போராடினார்கள்.

போராட்டத்தின் காரணமாக அமைச்சரவை அந்தஸ்த்துக்கள் பறிக்கப்பட்டன. இதற்கு நீதி கோரி அவர்கள் நீதிமன்றம் சென்றார்கள்.

அமைச்சரவையில் ஒரு விடயம் தொடர்பில் கலந்துரையாடவும், கருத்துக்களை தெரிவிக்கவும் அமைச்சர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டால் அவர்கள் அவ்விடயம் குறித்து மக்கள் மத்தியில் கலந்துரையாடலாம், அதற்கான முழு உரிமையும் அமைச்சர்களுக்கு உண்டு என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


ஆகவே நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை தற்போது நாங்கள்(பங்காளி கட்சி) பயன்படுத்துகிறோம்.

யுகதனவி மின்நிலையத்தின் பங்குகள் தொடர்பில் அமெரிக்காவின் நியூபோர்ட் நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் இரு பிரதான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

300 மெகாவாட் தரத்தில் இயங்கும் யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளின் 40வீதம்,எதிர்காலத்தில் நிர்மானிக்க தற்போது திட்டமிடப்பட்டுள்ள 350 மெகாவாட் தரத்திலான எரிவாயு ஊடான மின்நிலையத்தின் பங்குகளில் 49 சதவீதத்தை குறித்த அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்படும்.

இரண்டாவது கட்டத்தில் நாட்டின் மின் கட்டமைப்பிற்கும், எதிர்காலத்தில் நிர்மானிக்கப்படும் மின் நிலையங்களுக்கும் நிரந்தரமாக அமெரிக்காவின் நியூபோர்ட் நிறுவனத்திற்கு வழங்கப்படுவது குறிப்பிட்பட்டுள்ளது.

எரிவாயு விநியோகிக்கும் சர்வ அதிகாரங்களும் அமெரிக்க நிறுவனத்திற்கு மின்வலுத்துறை தொடர்பிலான அதிகாரங்களை வெளிநாட்டவர்களுக்கு வழங்குவது ஆபத்தானது,அதிலும் அமெரிக்கா என்பது ஆபத்து பாரதூரமானது.


இயற்கை எரிவாயு திரவ செயற் திட்டத்தில் மிதக்கும் கப்பல், எரிவாயு குழாய், அவற்றின் ஊடாக மின்நிலையங்களுக்கு எரிவாயு விநியோகித்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் உள்ளடக்கப்பட்டன. இச் செயற்திட்டத்திற்கான யோசனை 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தேசிய மட்டத்தில் கொண்டு வரப்பட்டது.

இந்த செயற்திட்டத்திற்கு தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டன. ஒரு நாட்டிற்கு இத்திட்டத்தை வழங்கினால் பிறிதொரு நாட்டை பகைத்துக் கொள்ள நேரிடும் என்பது தொடர்பிலும். ஏனைய பொது விடயங்கள் தொடர்பிலும் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் டலஸ் அழகப் பெருமவுடன் 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டேன்.

இச்செயற் திட்டத்திற்கான திறந்த விலைமனுக் கோரலை கடந்த பெப்ரவரி மாதம் கோரினோம். மிதக்கும் கப்பல் நிர்மானத்திற்கான விலைமனு கோரலை மின்சாரத்துறை அமைச்சும், எரிவாயு விநியோக குழாய் நிர்மான விலைமனு கோரலை பெற்றோலிய கூ;ட்டுத்தாபனமும் வெளியிட்டது.

இருப்பினும் எரிவாயு விநியோகத்தை பிற தரப்பினருக்கு வழங்கவில்லை மின்சாரத்துறை அமைச்சு தனதாக்கிக் கொண்டது.

எரிவாயு விநியோகத்தை எத்தரப்பினருக்கும் வழங்;க வேண்டாம், அவ்வாறு வழங்கினால் பாரிய விளைவுகள் ஏற்படும்.என முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம் வலியுறுத்தினோம். இதற்கான இரண்டு விலைமனுக் கோரலை மின்சாரத்துறை அமைச்சு 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வெளியிட்டோம்.

அமெரிக்காவின் நியூபோர்ட் நிறுவனம் இந்த விலைமனு கோரலில் பங்குப்பற்றவில்லை. விலைமனு கோரலில் பங்குப்பற்ற வேண்டாம், இருப்பினும் யுகதனவி செயற் திட்டத்தை பெற்றுத் தருவோம் என அமெரிக்காவின் நியூபோர்ட் நிறுவனத்திற்கு அரசாங்கத்தில் தற்போது ஆதிக்கத்தில் உள்ளவர் வாக்குறுதி வழங்கியுள்ளார். அந்த வாக்குறுதிக்கு அமைய விலைமனு கோரல் இல்லாமல் குறித்த நிறுவனத்திற்கு செயற்திட்டம் வழங்கப்பட்டுள்ளது.


இதில் பிரதான நான்கு பிரச்சினைகள் காணப்படுகின்றன.இலங்கை அரசியல் மற்றும் நிர்வாக வரலாற்றில் விலைமனு கோரலுக்கு பங்கு பற்றாத நிறுவனத்திற்கு ஏற்கெனவே இரண்டு விடயங்களுக்கு கோரப்பட்ட விலைமனுவையும் ஒன்றினைத்து செயற்திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

ஊழல் மோசடிக்கு பெயர்போன ஜே.ஆர் யுகம், பிரேமதாச யுகம், சந்திரிக்கா யுகம்,மற்றும் ரணில் யுகத்திலும் இவ்வாறான முறை கேடு இடம் பெறவில்லை.என்பதை பெருத்த வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் இது முதலாவது பிரச்சினை.

வலு சக்தி மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை சீனா,லெபனான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மின்சாரத் துறையில் பாரிய நெருக்கடிகளை எதிர்க் கொண்டுள்ளன. எரிவாயு விநியோகத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கினால் இலங்கையை இருளில் வைக்க வேண்டும், இல்லையா என்பதை தீர்மானிக்கும் உரிமை அமெரிக்காவிற்கு செல்லும்.

இராணுவத்தினரை தண்டிக்காது விட்டால் பொருளாதார தடை விதிப்போம், சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கா விட்டால் பொருளாதார தடை விதிப்போம் என தொடர்ந்து அழுத்தம் பிரயோகிக்கும் அமெரிக்காவிற்கு தான் இலங்கையின் எதிர்காலம் யுகதனவி மின்நிலையத்தின் ஊடாக கையளிக்கப்பட்டுள்ளது.

நாட்டை இரண்டு நாட்களுக்கு இருளில் தள்ளி அமெரிக்கா விதிக்கும் நிபந்தனைகளுக்கு அடிபணிய நேரிடும் என்பதை மக்களுக்கு தெளிவுப்படுத்துவது எமது பொறுப்பாகும். அதேபோல் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் 4.2 பிரிவில் எரிவாயு விநியோகிக்கும் காலம் 5 வருடத்திற்கோ அல்லது அப்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு காலம் தொடர்பில் தீர்மானிக்கும் உரிமை நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் இலங்கைக்கு நிரந்தரமாக எரிவாயு விநியோகிக்கும் உரிமை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.இது மூன்றாவது பிரச்சினை. தற்போது மன்னார் மாவட்டத்தில் கனிய வளங்கள் தொடர்பிலான ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்க நிறுவனம் இதிலும் தாக்கம் செலுத்த நேரிடும்.

நியூபோர் நிறுவனம் இலங்கையில் ஆதிக்கம் செலுத்தினால் ஏனைய நாடுகளின் முதலீடுகள் இலங்கைக்கு கிடைக்கப் பெறாது. அத்துடன் சீனா, இந்தியா ஆகிய நாடுகளையும் பகைத்துக் கொள்ள நேரிடும்.

யுகதனவி செயற்திட்டத்தை ஜப்பான்,தென்கொரியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு வழங்குவதாக ஆரம்பத்தில் குறிப்பிட்டோம். இந்நாடுகளுக்கு யுகதனவியின் மூன்று செயற் திட்டங்களையும் வழங்க முடியாத காரணத்தினால் திறந்த விலைமனு கோரலை வெளியிட்டோம்.


இலங்கைக்கு எதிராக சர்வதேச அரங்கில் யோசனைகள் முன் வைக்கப்பட்ட போது சீனா, பாக்கிஸ்தான் ஆகிய நாடுகள் நிபந்தனையற்ற ஆதரவை இலங்கைக்கு வழங்கின. விலைமனுக் கோரலில் கலந்துக் கொண்ட நாடுகளுக்கு வழங்காத செயற்திட்டம் விலைமனு கோரலுக்கு கலந்துக் கொள்ளாத நாட்டுக்கு வழங்கப் பட்டுள்ளமையினால் நட்பு நாடுகளையும் பகைத்துக் கொள்ள நேரிடும்.

எதிர்காலத்தில் சீனா, பாக்கிஸ்தான் இலங்கைக்கு எதிரி நாடுகளாக மாற்றமடைவது ஆச்சரியத்திற்கு உரியதல்ல, அமெரிக்க நிறுவனத்திற்கு யுகதனவி மின்நிலைய பங்குகள் வழங்கப் பட்டுள்ளமை பாரதூரமானதாக அமையும்.

அமைச்சு பதவிகளை வகித்துக் கொண்டு அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களுக்கு தலையாட்டிக் கொண்டிருந்தால் எதிர்காலம் எங்களை சபிக்கும். ஆகவே அமைச்சு பதவி மாத்திரமல்ல, நாட்டை பாதுகாக்க எதனையும் அர்ப்பணிக்க தயார் என்பதை அமெரிக்காவின் முகவருக்கு தெரிவித்துக் கொள்கிறாம்.

நாட்டை பாதுகாக்கும் போராட்டத்திற்கு நாட்டு மக்கள் அனைவரும் எம்முடன் ஒன்றினைய வேண்டும்.என அழைப்பு விடுத்தார்.