மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத சேவைகள் திங்கள் முதல் ஆரம்பம்..!

0

கொவிட் – 19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக சுமார் மூன்று மாத காலமாக இடைநிறுத்தப்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவை திங்கள் முதல் மீள ஆரம்பமாகும்.

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய அனைத்து பயணிகளும் இனி புகையிரத சேவையை பயன்படுத்த முடியும். திங்கட்கிழமை முதல் பயணச்சீட்டு விநியோகிக்கப்படும் என புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.


புகையிரத சேவைகள் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால் சுமார் மூன்று மாத காலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் புகையிரத சேவைகள் திங்கட்கிழமை முதல், சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய ஆரம்பிக்கப்படவுள்ளன.

காலை மற்றும் மாலை அலுவலக புகையிரத சேவைக்காக 150 இற்கும் அதிகமான புகையிரத பயணங்கள் போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளன.


திங்கட்கிழமை முதல் பிரதான புகையிரத பாதையில் 50 புகையிரத பயணங்களும், கரையோர புகையிரத பாதையில் 66 புகையிரத பயணங்களும், களனி வழி பாதையில் 17 புகையிரத பயணங்களும், புத்தளம் வழி பாதையில் 16புகையிரத பயணங்களும், வடக்கு புகையிரத பாதையில் 3 புகையிரத பயணங்களும் சேவையில் ஈடுப்படவுள்ளன.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு கடந்த மாகாண எல்லைக்குட்பட்ட வகையில் புகையிரத சேவைகள் கடந்த 25ஆம் திகதி முதல் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் ஆரம்பிக்கப்பட்டன. பயணிகள் பருவகால அட்டை (சீசன்) உள்ளவர்கள் மாத்திரம் புகையிரத சேவையை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.


மாகாண பயணத்தடை நீக்கப்பட்டதன் காரணத்தினால் திங்கட் கிழமை முதல் அனைத்து பயணிகளும் புகையிரத சேவையினை பயன்படுத்த முடியும். புகையிரத நிலையங்களில் திங்கட் கிழமை முதல் புகையிரத பயணச் சீட்டு விநியோகிக்கப்படும்.

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு மதிப்பளித்து பயணிகள் புகையிரத சேவையை பயன்படுத்துவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.