அதிபர்-ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர் போராட்டம்..!

0

ஆசிரியர்-அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர் சத்தியாக் கிரக போராட்டத்தில் ஈடுப்படுவோம். எமது அமைதி வழி போராட்டத்தை முடக்க அரசாங்கம் சர்வாதிகாரமாக செயற்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை சத்தியாக்கிரக போராட்டம் தொடரும் என அகில இலங்கை அதிபர் சேவை தொழிற் சங்கத்தின் தலைவர் வண. உலபனே சுமங்கல தேரர் தெரிவித்தார்.


கொழும்பு காலி முகத்திடலின் முன்பாக ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சத்தியாக் கிரக போராட்டத்தில் ஈடுப்பட்டதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து அதிபர்-ஆசிரியர் தொழிற் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள்.

தற்போதைய போராட்டத்திற்கு இதுவரையில் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்பு கூறவேண்டும். 24 வருட காலமாக தீர்க்கப்படாத சம்பள பிரச்சினைக்கு தற்போது தீர்வு பெற்றுக் கொள்ள உறுதியாகவுள்ளோம்.


முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வுகோரி அதிபர்-ஆசிரியர் தொழிற் சங்கத்தினர் நேற்று காலி முகத்திடம் முன்பாக போராட்டத்திற்கு என ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் கூடாரமிட்டு சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள்.

அமைதி வழி போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது கொழும்பு –கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகள் சர்வாதிகாரமான முறையில் தாக்குதலில் ஈடுப்பட்டார்கள். கூடாரங்களை உடைத்து கீழத்தரமான முறையில் செயற்பட்டார்கள்.


இவ்வாறான செயற்பாடுகள் வன்மையாக கண்டிக்கத்தக்கவை. எமது சத்தியாக்கிரக போராட்டம் வெற்றிகரமான முறையில் முன்னெடுத்து செல்லப்படும்.

முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில் தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சர் இதுவரை வாய்ப்பு வழங்கவில்லை. ஆகவே பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை சத்தியாக்கிரக போராட்டம் தொடரும் என்றார்.