மக்களுக்கு கட்டாய கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது..!

0

இலங்கையில் இதுவரை கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாத மக்களுக்கு கட்டாய கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், தடுப்பூசி பெறாதவர்களினால் ஏனையவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதாக கூறினார்.


இதன் போது மேலும் கருத்துரைத்த அவர்,

கொரோனா தடுப்பூசியினைப் பெற்றுக் கொள்ளுமாறு பிரஜைகளைக் கட்டாயப்படு்த்த முடியாது ஆனால், தடுப்பூசி பெறாதவர்களினால் ஏனையவர்களுக்குப் பிரச்சனை ஏற்படும் என்றால் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நாட்டில் பெரும்பான்மையானவர்கள் தடுப்பூசியினைப் பெற்றுள்ள நிலையில், ஏனையவர்கள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது.


இவர்களுக்கான தடுப்பூசித் திட்டம் குறித்து சட்ட ஏற்பாடுகள் கொண்டு வரப்பட்டு இந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடு.

எதிர்வரும் நவம்பர் மாதம் மூன்றாவது தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. ஏனைய நாடுகளில் மூன்றாவது தடுப்பூசிக்கு பணம் அறவிடப்படும் நிலையில் நாம் மக்களுக்கு இலவசமாக வழங்கவுள்ளோம்.


ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். அதற்கு முன் நாட்டில் வீழ்ச்சியடைந்துள்ள கல்வியினை கட்டியெழுப்ப ஆசிரியர்கள் பங்களிப்பு வழங்கப்பட வேண்டும் என்றார்.