அல்லாஹ்வை இழிவுபடுத்தினால் அதற்கு எதிராக இளைஞர்கள் உயிரை துச்சமென மதித்து போராடுவார்கள்..!

0

இலங்கையில் மீண்டுமொரு இரத்தக் களரியை ஏற்படுத்தும் நோக்கிலா, கலகொட அத்தே ஞானசார தேரர், அல்லாஹ்வை விமர்சித்து கருத்து வெளியிட்டுள்ளார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் சுபைதீன் ஹாஜியார் கேள்வி எழுப்பியுள்ளார்.


இஸ்லாமியர்களின் வணக்கத்திற்குரிய இறைவனான அல்லாஹ்வை இழிவுபடுத்தினால் அதற்கு எதிராக இஸ்லாமிய இளைஞர்கள் உயிரையும் துச்சமென மதித்து போராடுவார்கள் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.


தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கருத்து வெளியிட்ட பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் ‘அடிப்படைவாத தாக்குதல்தாரிகளை உருவாக்கும் சூத்திரதாரி அல்லாஹ்வே என தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலையில், இந்த கருத்து தொடர்பில் விசாரணை நடத்தி தேரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளது.


முறைப்பாட்டின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் சுபைதீன் ஹாஜியார், கலகொட அத்தே ஞானசார தேரரின் கருத்தின் நோக்கம் குறித்து சந்தேகம் வெளியிட்டார்.