நிபா வைரஸ் பரவல்: தமிழக மக்கள் பதற்றமடைய தேவை இல்லை – மக்கள் நல்வாழ்வுத் துறை

0

நிபா வைரஸ் குறித்து பதற்றமடைய தேவை இல்லை என தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சின் செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்திய மாநிலமான கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு நிபா பாதிப்பால் சிறுவன் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த 17 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.


காய்ச்சல் மற்றும் வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் மருத்துவ மனையை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கேரளாவில் கண்டறியப்பட்ட நிபா வைரஸ் பாதிப்பு பற்றி, மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி கிடங்கை, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.


பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

நிபா வைரஸ் காரணமாக கேரளாவிலிருந்து வரக் கூடியவர்களை கண்காணித்து வருவதாகக் கூறினார். நிபா வைரஸ் குறித்து பதற்றமடைய தேவை இல்லை என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை,கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக மருத்துவ நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

NIV என்றால் என்ன?

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி ‘நிபா வைரஸ்’ என்பது உயிரினங்களுக்குள் நோய் பரப்பும் வகையில் செயல்படும் ஒரு தொற்றுக்கிருமி. பேரமிக்ஸிவிரிடே என்னும் குடும்பத்தின் கீழ் வரும் வைரஸ் இது. நிபா வைரஸ் ஹென்ட்ரா வைரஸுடன் நெருங்கிய தொடர்புடையது.

இது 1998ல் முதன்முதலாக மலேசியா மற்றும் சிங்கப்பூரில் கண்டறியப் பட்டிருக்கிறது. அப்போது இந்தக் கிருமி பன்றிகளிடம் இருந்து மனிதர்களிடையே பரவியது. இந்த வைரஸுக்கு நிபா என்னும் பெயர் வரக் காரணம், `சுங்கை நிபா’ (Sungai Nipah) என்ற இடத்திலிருந்த ஒருவரின் உடலிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டதால் இந்தப் பெயர் வழங்கப்பட்டது.


அப்போது இந்த கிருமி பன்றிகளிடம் இருந்து மனிதர்களிடையே பரவியது. 265 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். நோயின் தீவிரம் காரணமாக, இதில் 40% பேர் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட வௌவால், பன்றி மற்றும் மனிதர்களிடம் இருந்துகூட மற்றவர்களுக்குப் பரவுகிறது.

2004ல் வௌவால்களால் கீழே தள்ளப்பட்ட பழங்களைச் சாப்பிட்டவர்களை இந்த வைரஸ் தாக்கியது. வங்காளதேசம் மற்றும் இந்தியாவில் மனிதர்களிடம் இருந்து இந்த நோய் பரவத் தொடங்கியது. நிபா வைரஸுக்கு காற்றில் பரவும் தன்மை இல்லை என தெரிவிக்கப் பட்டிருக்கிறது.


நேரடி தொடர்பு மூலமே பரவுகிறது என்கிறார்கள் நிபுணர்கள். இதற்கு முன்பு இந்தியாவில் 2001 மற்றும் 2007-ம் ஆண்டு மேற்கு வங்கத்தை இந்நோய் தாக்கியது. 2001ல் சிலிகுரி என்னும் இடத்தில், இந்நோயினால் தாக்கப்பட்ட 66 பேரில் 45 பேர் உயிரிழந்தனர். 2007ல் நாடியா என்னும் இடத்திலுள்ள 5 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

கேரளாவை இந்நோய் தாக்குவது இதுவே முதல் முறை. இந் நிலையில், அண்டை மாநிலமான தமிழ்நாடு விழித்துக் கொள்ள வேண்டிய அவசரம் அதிகரித்திருக்கிறது.


தலைவலி, காய்ச்சல், குமட்டல், தலைச்சுற்று, சோர்வு, மனக்குழப்பம் போன்றவை இந்நோய்க்கான அறிகுறிகள். ஆரம்ப நிலையில் மூச்சுத் திணறலும் ஏற்படும். இந்த அறிகுறிகள் 7-10 நாள்கள் வரை நீடிக்கும்.

இதுவரை மனிதனையோ இல்லை விலங்குகளையோ குறிப்பிட்ட இந்த நிபா வைரஸ் பாதிப்பில் இருந்து காப்பாற்றுவதற்கு பிரத்யேக மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. வைரஸ் தாக்குதலுக்கான தீவிர சிகிச்சை மற்றும் மனதேற்றலின் மூலமே இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பராமரிக்கப்படுகிறார்கள்.

இந் நோயாளிகளைப் பராமரிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முகமூடி, கையுறை போன்ற முன்னெச்சரிக்கை உபகரணங்களை உபயோகிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.