அவசர காலச் சட்ட வர்த்தமானியை உடனடியாக மீளப் பெற வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர்

0

ஜனநாயகத்தை வீழ்த்தி சர்வாதிகாரமிக்க பயணத்தை நோக்கி நகரும் அவசரகால சட்ட வர்த்தமானியை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெற வேண்டும்.

நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்க வேண்டுமாயின் நுகர்வோர் பாதுகாப்பு உரிமை சட்டத்திற்கு அமைய செயற்படலாம். அதனை விடுத்து ஜனாதிபதி அவசரகால சட்டத்தை அவசரமாக அமுல்படுத்தியுள்ளதன் நோக்கம் என்ன என சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அவ்வறிக்கையில்,

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப் படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் அவசரகால சட்டத்தை நடைமுறைப் படுத்தியுள்ளது.

இது அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகள் மற்றும் திறமையின்மையை மூடி மறைக்கும் தன்னிச்சையான ஒரு செயற்பாடாக கருத வேண்டும்.


2003 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகாரச் சட்டத்தின் மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க முடியும். ஆனால் அரசாங்கம் அதனை விடுத்து அவசரகால சட்டத்தை அவசரமான நிலையில் பிரகடனப்படுத்தியுள்ளமை ஒரு ஆபத்தான நிலையை எடுத்துக் காட்டியுள்ளது.

ஜனநாயக கொள்கை மிக்க நாட்டை சர்வாதிகாரமிக்க நாடாக மாற்றி மனித உரிமைகளுக்கு சவால் விடுவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக உள்ளது என்பதை இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக விளங்கிக் கொள்ளலாம்.


அவசரகால சட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தி கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைக்க முடியாது. தடுப்பூசிகளையும் பெற முடியாது. பொருட்களின் விலையேற்றத்தையும், வெளிநாட்டு கையிருப்பின் அளவையும் கட்டுப்படுத்தாத அரசாங்கம் நாட்டு மக்களை கட்டுப்படுத்த அவசரகால சட்டத்தை பயன்படுத்துகிறது.

ஜனநாயகத்தை வீழ்த்தி சர்வாதிகாரமாக பயணத்தை நோக்கி செல்லும் அவசரகால சட்ட வர்த்தமானியை ஜனாதிபதி மீளப் பெற வேண்டும். நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்க நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் உள்ளது.


அச்சட்டத்திற்கு அமைய சட்ட விரோதமாக பொருட்களை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். அவசரகாலச் சட்டத்தை கொண்டு முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளையும் முற்றாக எதிர்ப்போம்.