மட்டக்களப்பில் சட்டவிரோத நெல் களஞ்சியப்படுத்திய 11 களஞ்சிய சாலைகளுக்கு சீல்..!

0

மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினரால் நெல் களஞ்சிய சாலைகள் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை கடந்த 4 தினங்கள் இடம் பெற்றது.

இதில் பதிவு செய்யப்படாமல் நெல்லினை களஞ்சியப்படுத்தி பதுக்கி வைத்திருந்த 1700 மெற்றிக் தொன் நெல் மூட்டைகள் களஞ்சியப் படுத்தப்பட்ட 11 களஞ்சிய சாலைகளுக்கு சீல் வைக்கப் பட்டதுடன் அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரி அன்வர் சதாத் தெரிவித்தார்.


அரசாங்க அதிபருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கடந்த 25 ம் திகதி தொடக்கம் நேற்று சனிக்கிழமை 28 திகதி வரை தொடர்ந்து 4 தினங்கள் நுகர்வோர் அதிகார சபை பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பு நகர், காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, ஏறாவூர், ஒட்டமாவடி, வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களில் உள்ள பதிவு செய்யப்படாத நெல் களஞ்சிய சாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது இந்த திடீர் சுற்றிவளைப்பு மேற்கொண்டனர்.


இதன் போது பதிவு செய்யப்படாமல் நெல்லினை  பதுக்கி வைத்திருந்த 1700 மெற்றிக் தொன் நெல் மூட்டைகள் களஞ்சியப்படுத்தப்பட்ட 11 களஞ்சிய சாலைகள் சீல் வைக்கப்பட்டதுடன் வழக்கு பதிவு செய்யப்பட்டது.