தனது நெருக்கடிகளை சமாளிப்பதற்காக கூட்டமைப்பை நெருங்கும் அரசாங்கம் – கலாநிதி தயான் ஜயதிலக

0

இலங்கையில் சீனாவின் மூலோபாய நடவடிக்கைகளிலிருந்து அமெரிக்கா, இந்தியா ஆகியவற்றை திசை திருப்புவதற்காகவும் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை சமாளித்துக் கொள்வதற்காகவுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் நெருங்கி வருகின்றது என்று எதிர்க்கட்சியின் வெளிநாட்டு உறவுகளுக்கான சிரேஷ்ட ஆலோசகரும் இராஜதந்திரியுமான கலாநிதி.தயான் ஜயதிலக குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடைமுறைச் சாத்தியமான 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுலாக்கும் கோரிக்கையை கைவிட்டு அதற்கு அப்பாலான விடயங்கள் பற்றி பேசுவதும் கடந்த கால விடயங்களை மீளவும் வலியுறுத்திக் கொண்டிருப்பதும் மீண்டும் ஒரு தடவை காலத்தினை வீணடிக்கும் செயற்பாடாகவே அமையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


அதேநேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்களை முன்வைத்துக் கொண்டிருப்பதால் அவர்களின் விடயத்தில் எவ்விதமான ஆரோக்கியமான நிலைமைகளும் ஏற்படாது. மாறாக வடக்கு கிழக்கில் இராணுவ மயமாக்கல், சிங்கள மயமாக்கள் ஆகியவற்றுக்கு அப்பால் சீன மயமாக்கலும் உருவெடுக்கும் ஆபத்துக்கள் நிறைவே உள்ளன என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இடம் பெறுவதற்குரிய முன்னகர்வுகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.