ஹிஷாலினியின் சடலம் மீது இரண்டாவது பிரேத பரிசோதனை; மூவரடங்கிய மருத்துவ குழு நியமனம்..!

0

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் பணிக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் இரண்டாவது பிரேத பரிசோதனையை முன்னெடுப்பதற்காக விசேட மருத்துவ அதிகாரிகள் மூவரடங்கிய குழுவொன்று பெயரிடப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த சிறுமியின் சடலம் நாளை வெள்ளிக்கிழமை மீண்டும் தோண்டி எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் பணிக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் இரண்டாவது பிரேத பரிசோதனையை முன்னெடுப்பதற்காக விசேட மருத்துவ அதிகாரிகள் குழுவொன்று பெயரிடப்பட்டுள்ளது.


கொழும்பு பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்தின் நீதிமன்ற மருத்துவ அறிவியல் தொடர்பான பேராசிரியர் ஜீன் பெரேரா , கொழும்பு பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்தின் நீதிமன்ற மருத்துவ அறிவியல் பிரிவின் பிரதானி சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியர் சமீர குணவர்தன, பேராதனை போதனா வைத்திய சாலையின் நீதிமன்ற மருத்துவ அறிவியல் தொடர்பான விசேட நீதிமன்ற வைத்திய நிபுணர் பிரபாத் சேனசிங்க ஆகியோர் இந்த விசேட குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


இந்த விசேட குழுவினரால் நாளை வெள்ளிக்கிழமை (30) சிறுமியின் சடலம் புதைக்கப்பட்டுள்ள டயகம பிரதேசத்தின் கல்லறைக்குச் சென்று அவரது சடலம் தோண்டி எடுக்கப்படவுள்ளது.

குறித்த பிரதேசத்தின் நீதவான் நீதிபதியின் கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. அத்தோடு இந்த துறையில் நிபுணத்துவமுடைய மேலும் பல நிபுணர்களும் குறித்த பகுதிக்குச் செல்லவுள்ளனர்.