ரிஷாட்டின் அடிப்படை உரிமை மீறல் வழக்கிலிருந்து தொடர்ச்சியாக விலகிச் செல்லும் நீதியரசர்கள்..!

0

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியூதீன் ஆகியோர் மனுத் தாக்கல் செய்துள்ள வழக்கின் பரிசீலனைகளில் இருந்து மேலும் ஒரு உயர் நீதிமன்ற நீதியரசர் விலகியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக குறித்த மனுக்கள் மீதான பரிசீலனைகளில் இருந்து தான் விலகுவதாக இன்று மஹிந்த சமயவர்தன அறிவித்துள்ளார்.

அதன்படி நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் இருந்து விலகும் நான்காவது நீதியரசர் இவர் ஆவார்.


ஏற்கனவே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் தலைவரக செயற்பட்ட தான், மனுதாரர்கள் இருவர் குறித்தும் அவ்வாணைக் குழுவில் சாட்சிகளை செவிமடுத்துள்ளதாக குறிப்பிட்டு, அதன் அடிப்படையில் இம்மனுக்கள் மீதான பரிசீலனைகளில் இருந்து விலகுவதாக நீதியரசர் ஜனக் டி சில்வா கடந்த மே 28 ஆம் திகதி அறிவித்திருந்தார்.

இதனையடுத்து தனிப்பட்ட காரணிகள் என தெரிவித்து நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட கடந்த ஜூன் 4 ஆம் திகதி மனு மீதான பரிசீலனைகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.


அதன் பின்னர் ஜூன் 4 ஆம் திகதி தனிப்பட்ட காரணங்களை முன்னிறுத்தி இவ்வழக்கு விசாரணைகளிலுருந்து ஒதுங்கிக் கொள்வதாக நீதியரசர் ஏ.எச்.எம்.ஏ நவாஸ் அறிவித்திருந்தார்.

முன்னாள் அமைச்சரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தம்மை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து சி.ஐ.டி.யினர் தடுத்து வைத்துள்ளதை ஆட்சேபித்து தலா 500 கோடி ரூபா நட்ட ஈடு பெற்றுத் தரக் கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.