ஊடகவியலாளருக்கு உயர் பொலிஸ் அதிகாரி அச்சுறுத்தல் – பொங்கியெழுந்த ஊடக அமைப்புக்கள்

0

இலங்கையில் ஊடகவியலாளர் ஒருவர் முகப்புத்தகம் ஊடாக பகிர்ந்த செய்தியொன்று தொடர்பில், கருத்து பதிவிட்ட மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் ஸ்ரீலங்கா காவல்துறை மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடகவியலாளருக்கு விடுத்துள்ள மறைமுக அச்சுறுத்தல் தொடர்பில் ஊடக அமைப்புக்கள் ஸ்ரீலங்கா காவல்துறை மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளன.


பதிவிட்ட மேல் மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனுடைய மறைமுக அச்சுறுத்தல் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து ஊடகவியலாளரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு இலங்கையிலுள்ள ஊடக அமைப்புக்கள் குறித்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளன.

ஊடக சேவையாளர் தொழிற்சங்க சம்மேளனம் , சுதந்திர ஊடக அமைப்பு, இலங்கை தொழிற்சார் ஊடகவியலாளர்களின் சங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் மற்றும் இலங்கை இளம் ஊடகவியலாளர்களின் சங்கம் ஆகியன இணைந்து ஸ்ரீலங்கா காவல்துறை மா அதிபருக்கு இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளன.


குறித்த ஊடகவியலாளர் பொய்யான செய்தியினை வெளியிட்டதாகவும், அதற்கு இயற்கை தண்டனையளிக்கும் எனவும் தொடர்ச்சியாக குறிப்பிட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் காவல்துறைமா அதிபர், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் ஏனைய குற்றவாளிகளுக்கு என்ன நடந்தது என்பதை அவதானிக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் இதன்போது தான் எழுதிய பொய்யான செய்தி எது என வினவியுள்ள நிலையில், அதற்கு உறுதியான பதிலொன்று தேசபந்து தென்னகோனால் அளிக்கப்பட்டிருக்கவில்லை என காவல்துறைமா அதிபருக்கு, ஊடக அமைப்புகளால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஒரு இடத்தில் மாத்திரம் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பிலான செய்தியொன்று தொடர்பில் அவரால் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொய்யான செய்தியை பிரசுரித்ததாக குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்டு தற்போதும் தடுப்பில் உள்ள பெரும்பாலானோருக்கு எதிராக முறையாக நீதிமன்றங்களில் குற்றச்சாட்டுக்கள் கூட முன் வைக்கப்பட்டிராத பின்னணியில், சிரேஷ்ட காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன், ஊடகவியலாளருக்கு அளித்துள்ள பதில் கருத்துக்கள் தொடர்பில் மிக்க அவதானம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இது தொடர்பில் முறையான விசாரணை ஒன்றினை முன்னெடுத்து, ஊடகவியலாளரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் அந்த கடித்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.