தமிழ் மக்கள் கௌரவமான அரசியல் தீர்வை பெறுவதற்கு இந்தியா எமக்கு உதவ வேண்டும் – சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை

0

தமிழ் மக்கள் கௌரவமான ஒரு அரசியல் தீர்வை பெற்றுக் கொள்வதற்கு இந்தியா முன்வர வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 31வது தியாகிகள் தினம் வவுனியாவில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்றைய தினம் 19.06.2021 அனுஸ்டிக்கப்பட்டது. இவ் நிகழ்வில் கலந்து கொண்டு நினைவு பேருரை ஆற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கை, இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப் படுத்தியிருந்தால் பல்லாயிரக் கணக்கான உயிரிழப்புக்கள் சொத்தழிவுகளை தடுத்திருக்கலாம்.

இந்த நிலமை வரக்கூடாது என்பதற்காகதான் தோழர் பத்மநாபாவும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் வடகிழக்கு மாகாண அரசு தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வாக அமையாவிட்டாலும் கூட தமிழ் மக்களுக்கு ஏற்படப் போகின்ற பாரிய அழிவுகளில் இருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்ற தூரநோக்கோடு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக 13வது திருத்த சட்டத்தை ஏற்றுக் கொண்டு அன்றைய கால கட்டத்தில் மாகாண அரசாங்கத்தை பொறுப்பேற்றோம்.


எம்மையும் ஏனைய அமைப்புக்களையும் தவிர ஏனைய அரசியல் தலமைகள் இதற்கு ஒத்துழைக்காத காரணத்தினால் எமது மக்கள் மிகப்பெரிய மனித பேரவலத்தை இன்று சந்தித்திருக்கின்றார்கள்.

அத்துடன் இலங்கை அரசாங்கத்தில் மாறி மாறி ஆட்சிக்கு வந்தவர்கள் 13வது அரசியல் யாப்பில் உள்ளபடி மாகாண சபைக்கு உள்ள அதிகாரங்களை வழங்குவதற்கு பதிலாக வடக்கு கிழக்கு என்று மாகாணங்களை இரண்டாக பிரித்து மட்டுமன்றி இன்று கல்வி,சுகாதாரம் போன்ற விடயங்களை மாகாண அரசிடம் இருந்து பறித்தெடுப்பதிலே குறியாக செயற்பட்டு வருகின்றார்கள்.

யுத்தம் முடிந்து 12வருடங்கள் கடந்தும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாகாண சபைக்குரிய முழுமையான அதிகாரங்களை பெற்றுக் கொடுப்பதற்கு இந்தியா இன்னமும் முன் வரவில்லை. தமிழ் மக்கள் கௌரவமான ஒரு அரசியல் தீர்வை பெறுவதற்கு இந்தியா இனியாவது எமக்கு உதவ முன்வர வேண்டும் என தெரிவித்தார்.


இந்நிகழ்வு கட்சியின் அரசியல் உயர்பீட உறுப்பினர் தோழர் அருந்தவராஜா தலமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நகரசபை தலைவர் கௌதமன் மத்திய குழு உறுப்பினர்களான தோழர்கள் றேகன், பாபு, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் அருளானந்தம், வவுனியா நகர சபை உறுப்பினர் சமந்தா செபநேசராணி மற்றும் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

(Media Unit)

உங்கள் பிரதேச செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள் மின்னஞ்சல் முகவரி News.tamilpori@gmail.com