மாகாண சபையின் அதிகாரங்களை பிடுங்கி தன்வசப்படுத்தும் அரசு – இந்திரகுமார் பிரசன்னா

0

மாகாண சபையின் அதிகாரங்களை தன்வசப்படுத்தும் விடயங்களை மத்திய அரசாங்கம் துரிதமாக செயற்படுத்துகின்றது. அதிலும் மாகாண சபைக்குரிய பாடசாலைகள், வைத்தியசாலைகளைத் தரமுயர்த்தல் என்ற பெயரில் மத்திய அரசின் கீழ் கொண்டு வந்து மாகாண சபைகளின் அதிகாரங்களைப் பிடுங்கும் செயற்பாடுகளையே மேற்கொள்கின்றது என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதித் தவிசாளரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவருமான இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்தார்.

இன்றைய தினம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா மன்றத்தினால் நடாத்தப்பட்ட தியாகிகள் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்த்திற்குத் தங்களை அர்ப்பணித்த உன்னதத் தலைவர்களில் தோழர் பத்மநாபாவும் ஒருவர். அவரை இழந்து நிற்பது இன்றைய நிலையில் எங்களுக்கு மிகவும் வேதனை தரும் விடயமே.

எமது தலைவர்களால் முன்னெடுக்கப்பட்ட தேச விடுதலைப் போராட்டத்திலே எமது ஒன்றுமையின்மையின் காரணத்தினால் பல துர்ப்பாக்கிய நிகழ்வுகள் இடம்பெற்று பல தலைவர்களை இழந்திருக்கின்றோம். அவ்வாறு எமது தலைவர்களின் தியாகம், எமது மக்களின் வலி, எமது தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் போன்றனவற்றின் மூலம் கிடைக்கப்பெற்ற முக்கிய விடயமே இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடான 13வது திருத்தச் சட்டம்.


இந்த 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப் படுத்துவதற்கு இந்த நாட்டின் அரசாங்கங்கள் கபட நாடகம் ஆடிக் கொண்டிருக்கின்றன. அண்மையில் இந்தியாவின் உயர்ஸ்தானிகர் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்த போது 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்ப்படுத்துவதற்கு பூரணமாக ஒத்துழைப்போம் என்று சொல்லியிருக்கின்றார்கள்.

ஆனாலும், இந்தியா இந்த விடயத்தைச் சொல்லிக் கொண்டு மாத்திரம் இல்லாமல் முழுமையாகவும், விரைவாகவும் கையாள வேண்டும். தற்போதை நிலையில் மாகாணசபையின் அதிகாரங்களைத் தன்வசப்படுத்தும் விடயங்களை மத்திய அரசாங்கம் துரிதமாக மேற்கொண்டு வருகின்றது.


அதிலும் மாகாணசபைக்குரிய பாடசாலைகள், வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டு வந்து மாகாண சபைகளின் அதிகாரங்களைப் பிடுங்கும் செயற்பாடுகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.

மாகாணத்திற்குரிய பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக்குதல் என்ற பெயரிலும், வைத்தியசாலைகள் தரமுயர்த்தல் என்ற பெயரிலும் மத்திய அரசின் கீழ் கையகப்படுத்தி அவற்றின் மீதுள்ள மாகாண அதிகாரங்களைக் குறைப்பதை விட அவற்றுக்கான நிதி ஒதுக்கங்களை அதகரித்து அவற்றினை அபிவிருத்தி செய்து மாகாணசபைகளின் கீழேயே தரமுள்ளனவாக இயங்கச் செய்ய முடியும்.


ஆனால் அரசாங்கம் அவற்றைச் செய்யாமல் அபிவிருத்தி என்ற மாய வலையின் மூலம் மாகாண அதிகாரங்களைக் குறைக்கவே எண்ணுகின்றது. எனவே இந்திய உட்பட சர்வதேச நாடுகள் இந்த 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்ப்படுத்துவதற்காக தங்கள் கொள்கை வகுப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்தி சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் மிக விரைவில் மாகாண சபைகளை நடத்தி அதற்கும் மேலாக தமிழ் மக்களுக்குரிய நிரந்தரத் தீர்வினைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.