ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு ஒருபோதும் அடி பணிய முடியாது – அஜித் நிவார்ட் கப்ரால்

0

இலங்கைக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்குமாயின் அதனால் தேசிய பொருளாதாரத்திற்கு பெருமளவிற்கு பாதிப்பு ஏற்படாது.

வரிச்சலுகையை பெற்றுக் கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிடும் நிபந்தனைகளுக்கு அடிபணிய முடியாது என நிதி மூலதனச்சந்தை இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.

பொருளாதார காரணிகளை கொண்டு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை தற்போது அரசியல் மயப்படுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இலங்கைக்கு ஜி. எஸ். பி வரிச் சலுகை வழங்கப்பட்டது. இதனை பெற்றுக் கொள்வதற்காக நல்லாட்சி அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு வழங்கிய வாக்குறுகிகள் அக்காலக்கட்டத்தில் பெருமளவில் நிறைவேற்றப்பட்டன.

நிதியை பெற்றுக் கொள்வதற்காக நாட்டின் இறையான்மை பல சந்தர்ப்பங்களில் விட்டுக் கொடுக்கப்பட்டது. தேசிய பாதுகாப்பு பலவீனமடைவதற்கும் இது ஒரு காரணியாக காணப்பட்டது.


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை நிறுத்தப்பட்டது. இதனால் இலங்கையின் ஏற்றுமதித்துறை பெருமளவிற்கு பாதிப்படையவில்லை.

2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தைத்த ஆடைகளில் 50 சதவீதமானவையே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

அரசியல் காரணிகளை அடிப்படையாக கொண்டு அக்கால கட்டத்தில் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை நிறுத்தப்பட்டது. இதனால் தேசிய பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படவில்லை. 30 வருட கால யுத்தம் நிறைவு செய்யப்பட்டதை தொடர்ந்து, நாட்டின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிர்மாண பணிகள் துரிதகரமாக முன்னெடுக்கப்பட்டன. பொருளாதாரம் வளர்ச்சி மட்டத்தில் பேணப்பட்டது.

இலங்கைக்கு வழங்கப்பட்ட ஜி.எஸ்.பி வரிச்சலுகையை இடை நிறுத்தும் தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றியம் நிறைவேற்றியுள்ளது. இத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காரணிகள் ஏற்றுக் கொள்ள முடியாது.


பயங்கரவாத தடைச் சட்டம் அமுலில் இருத்தல், சீன முதலீடுகளை அதிகம் ஈர்த்தல் மற்றும் நாட்டின் உள்ளக காரணிகள் ஆகியவற்றை கருத்திற்கொண்டு வரிச்சலுகை நீக்கம் தொடர்பிலான காரணிகள் குறித்த தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பொருளாதார காரணிகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்ட ஜி.எஸ்.பி வரிச்சலுகை தற்போது அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.

ஜி.எஸ்.பி வரிச் சலுகை நீக்கப்படுவதால் நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாது. வரிச் சலுகை நீக்கப்படுவதால் டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி அதிகரிக்கும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத்தக்கது. ரூபாவின் பெறுமதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளன என்றார்.