சூடு பிடிக்கும் உதய கம்மன்பிலவின் எரிபொருள் விவகாரம்; விமலின் இல்லத்தில் ஒன்று கூடிய அமைச்சர்கள்..!

0

எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு ஏற்பட்ட நெருக்கடி நிலை குறித்து கலந்துரையாட அமைச்சர் விமல் வீரவன்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சிறப்பு கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தில் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித்தலைவர்கள் கலந்து கொண்டதாக தெரியவருகிறது. அமைச்சர் விமல் வீரவன்சவின் இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இந்த சம்பவம் தொடர்பாக உதய கம்மன்பிலவுக்கு தனது கட்சியின் முழு ஆதரவும் இருப்பதாக தெரிவித்தார்.


“சாகர கரியவாசம் அமைச்சர் உதய கம்மன்பிலவை ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அதுதான் விவாதிக்கப்பட்டது. அவருக்கு எங்கள் ஆதரவு இருக்கிறது. ” உதய கம்மன்பிலவை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுத்தது குறித்து விவாதிக்கப்பட்டதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

உதய கம்மன்பிலவை ஆதரிக்கவும், அவரை பிரதிநிதித்துவப் படுத்தவும் அனைத்து கட்சிகளும் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


இந்தக் கலந்துரையாடலில் அத்துரலிய ரத்ன தேரர், வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, டிரான் அலஸ், டொக்டர் ஜி. வீரசிங்க மற்றும் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

எரிபொருள் விலையை உயர்த்துவதற்கான முடிவை அறிவித்ததைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் அறிக்கையொன்றை வெளியிட்டார்.


இந்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் எரிபொருள் விலையை கட்டுப்படுத்த தவறிவிட்டார். எனவே அவர் இதற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டுமென தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.