கொரோனாவால் உயிரிழந்த உடல்களை தகனம் செய்ய பணம் அறவீடு – செல்வம் எம்.பி அவசரக் கடிதம்

0

வன்னியில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்கள், வவுனியா நகர சபை ஊடாக தகனம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்ற போது, அவர்களின் உறவினர்களிடம் பணம் அறவிடப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த செயற்பாடு தொற்றினால் உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு மேலும் துயரத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.


ஆகவே இவ்விடயம் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டுச் செல்லும் வகையில் கடிதமொன்றை செல்வம் அடைக்கலநாதன் இன்று (செவ்வாய்க்கிழமை) அவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களை உடலை தகனம் செய்வதற்கு வவுனியா நகர சபையினால் நிதி அறவிடப்படுகிறது.

அதாவது ஒருவரை தகனம் செய்வதற்கு 7 ஆயிரம் ரூபாய், வவுனியா நகர சபையினால் அறவிடப்படுகின்றது.


கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையினால் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வாழும் மக்கள், குறித்த தொகையை வழங்க முடியாத நிலைமையிலேயே உள்ளனர்.

ஆகவே மக்களின் இத்தகைய நிலைமையை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்” என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை பூந்தோட்டம் மயானத்தில் எரிவாயு பயன்படுத்தி எரிப்பதால் உடல்களை தகனம் செய்வதற்கு பணம் செலவாகின்றது என்பதுடன் கொரோனா காரணமாக வவுனியா நகரசபை பாரிய நிதி இழப்பை கடந்த இரு வருடங்களாக எதிர்கொண்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.