ஜூன் 7 ஆம் திகதி வரை பயணக் கட்டுப்பாடு நடைமுறையில்; ஜனாதிபதி அதிரடி..!

0

ஜூன் மாதம் 07ஆம் திகதி வரை பயணக் கட்டுப்பாட்டை தளர்த்தாதிருப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  தீர்மானித்துள்ளார். கொவிட் தடுப்பு விசேட குழு இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடிய சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி அவர்கள் இத் தீர்மானத்தை எடுத்துள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்வதற்கு நடமாடும் சேவை…

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தொடர்ச்சியாக…

பயணக் கட்டுப்பாட்டின் காரணமாக பொது மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட மூன்று நாட்களுக்கு பயணக் கட்டுப்பாட்டை தளர்த்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.


ஆனாலும் கடந்த 25ஆம் திகதி அதிகாலை 04.00 மணிக்கு பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட வேளையில் பொதுமக்கள் செயற்பட்ட விதம் நோய்த்தொற்று மேலும் பரவுவதற்கு இடமளித்ததைப் போன்றதாகும். எனவே நோய்த்தொற்று பரவுவதை தடுப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் இதன்மூலம் தோல்வி அடைய கூடுமென்று ஜனாதிபதி அவர்கள் சுட்டிக் காட்டினார்.

அதன்படி மே மாதம் 31ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 04ஆம் திகதி என்ற இரு தினங்களில் பயணக் கட்டுப்பாட்டை தளர்த்துவதற்கு எடுக்கப்பட்டிருந்த தீர்மானத்தை இடை நிறுத்துவதற்கும் எதிர்வரும் நாட்களில் பொதுமக்களுக்கு அவசியமான பொருட்களை நடமாடும் விற்பனை சேவையின் மூலம் விநியோகிப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கினார்.


பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள காலங்களில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு அனுமதி உண்டு. வீதிகளில் பயணிக்கும் போது தொழில் புரியும் இடங்களினால் வழங்கப்பட்டுள்ள கடிதம் மற்றும் தொழில் அடையாள அட்டையை கைவசம் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். கொவிட் தொற்று பரவுவதை தடுப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு பொதுமக்களும் பொறுப்புடன் ஒத்துழைக்க வேண்டுமென்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

சைனோபாம் தடுப்பூசி வழங்குதல் மே மாதம் 08 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது. அதன் முதலாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் ஜூன் மாதம் 08 ஆம் திகதி முதல் ஒரு மாத காலத்திற்குள் முதலாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்ட இடத்திலேயே இரண்டாவது தடுப்பூசியையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் சுகாதார பிரிவுக்கு பணிப்புரை விடுத்தார்.


சுகாதார பிரிவு இனங் கண்டுள்ள ஏனைய மாவட்டங்களிலும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை முறையாகவும் தொடர்ச்சியாகவும் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் தெளிவுபடுத்தினார்.

அமைச்சர்களான பவித்ரா வன்னியாரச்சி, காமினி லொக்குகே, பந்துல குணவர்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல, மஹிந்தானந்த அழுத்கமகே, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பிரசன்ன ரணதுங்க, ரோஹித்த அபேகுணவர்தன, நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே, சன்ன ஜயசுமன, பாராளுமன்ற உறுப்பினர் மதுர வித்தானகே, ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோருடன் அமைச்சுக்களின் செயலாளர்கள், முப்படைத் தளபதியினர் மற்றும் சுகாதார பிரிவு பிரதானிகள் இச்சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு