சட்டவிரோத செயற்பாடுகளை நியாயப்படுத்தும் மலின அரசியலை ஸ்ரீதரன் MP நிறுத்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்

0

சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசியல் சாயம் பூசி நியாயப் படுத்துவதுடன், மக்களுக்கு பயன் தரக் கூடிய அபிவிருத்தி திட்டங்களை தவறாக திசை திருப்புகின்ற மலினமான அரசியலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் நிறுத்த வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுயநலன்களுக்காக கிளிநொச்சி வலைப்பாட்டு பிரதேசத்தினை சேர்ந்த கடலட்டை பண்ணையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருக்கின்றமைக்கு தன்னுடைய கண்டனத்தினை வெளிப்படுத்திய போதே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

வலைப்பாடு கடற்றொழிலாளர் சங்கத்தினை சேர்ந்தவர்கள் 2014 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இருந்து உரிய அனுமதிகளைப் பெற்று எருமைதீவுக் குன்றுப் பகுதியில் கடலட்டை உற்பத்தியில் ஈடுபட்டு வந்தனர்.

எனினும் குறித்த பிரதேசத்தில் கடலட்டை வளர்ப்பதால் கற்பாறைகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவித்த நக்டா எனப்படும் தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபை சம்மந்தப்பட்ட பண்ணையை வேறு பிரதேசத்திற்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியிருந்தது.


இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் வலைப்பாடு கடற் றொழிலாளர் சங்கத்தின் ஆதரவுடன் குறித்த பண்ணையாளர்கள் தமது பண்ணை அமைந்திருந்த கடல் பிரதேசத்தில் இருந்து சுமார் 2 கிலோமீற்றர் தொலைவில் கரையை அண்டிய கடல் பிரதேசத்தில் கடலட்டை பண்ணையை இடம் மாற்றியுள்ளனர்.

இந்த இடமாற்றத்திற்கு தேவையான அனுமதிகள் எவையும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்படவில்லை என்பதுடன், சுமார் 30 வருடங்கள் பட்டி வலைத் தொழிலில் ஈடுபட்டு வந்த கிராஞ்சி கடற்றொழிலாளர் சங்கத்தினை சேர்ந்த ஒருவரின் வலைகளை எதேச்சதிகாரத்துடன் அறுத்து எடுத்துச் சென்றுள்ளதுடன், அந்த இடத்தில் குறித்த கடலட்டை பண்ணை உருவாக்கப்பட்டுள்ளது.


இந்தச் சட்ட விரோதச் செயற்பாட்டினால், கிராஞ்சி மற்றும் வலைப்பாடு கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் குறித்த விடயம் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசியல் சாயம் பூசி நியாயப் படுத்துவதுடன், மக்களுக்கு பயன் தரக் கூடிய அபிவிருத்தி திட்டங்களை தவறாக திசை திருப்புகின்ற மலினமான அரசியலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் நிறுத்த வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.