மே 18 அன்று எதுவித அச்சமும் இன்றி எமது மக்களை உணர்வு பூர்வமாக நினைவு கூருவோம் – விக்கி அறைகூவல்

0

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி கடந்த 12 ஆம் திகதி இரவு அடித்து உடைக்கப்பட்டு, புதிதாக நடப்படுவதற்காகக் கொண்டு வரப்பட்டிருந்த நடுகைக்கல் அகற்றப்பட்டமை அரசாங்கத்தின் காட்டு மிராண்டித்தனமான, நாகரிகமற்ற செயற்பாடாகும்.

அரசாங்கம் எத்தகைய மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி கோவிட் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக படுகொலை செய்யப்பட்ட எமது மக்களை உணர்வு பூர்வமாக நினைவுகூர இப்பொழுதே தயாராகுவோம் எனத் தெரிவித்த முன்னாள் வடக்குமாகாண முதலமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரன் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,


அரசாங்கத்தின் இந்த செயற்பாடு தமிழ் மக்களின் இதயங்களை மிகவும் ரணப்படுத்தி இருந்தாலும், எமக்கு இது ஆச்சரியத்தை அளிக்கவில்லை. ஏனென்றால் கடந்த காலங்களில் இத்தகைய பல மிலேச்சத்தனமான நடவடிக்கைகளை தமிழ் மக்களுக்கு எதிராக இந்த அரசாங்கம் மேற்கொண்டிருந்தது.

பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை முள்ளிவாய்க்காலில் கொன்று குவித்ததுடன் மட்டும் நின்று விடாமல், துயிலும் இல்லங்களை உழவு இயந்திரம் கொண்டு உழுது அழித்திருந்தார்கள். அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு எத்தகைய கேவலமான செயற்பாடுகளையும் செய்யலாம் என்ற சிந்தனையில் செயற்படும் இந்த அரசாங்கம் தனது தலையில் தானே மண்ணை அள்ளி வாரிக் கொட்டிக் கொண்டிருக்கின்றது.


முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது இனப் படுகொலை என்பதை உலகம் வெகு விரைவில் ஏற்றுக் கொள்ளத்தான் போகின்றது. அரசாங்கத்தின் இத்தகைய முட்டாள்த்தனமான செயற்பாடுகளினால் இந்த உண்மையை எப்போதும் மறைக்க முடியாது.

ஆர்மேனியாவில் நடைபெற்றது இனப் படுகொலை என்பதை இத்தனை காலம் கடந்த பின்னர் அமெரிக்கா இப்போது ஏற்றுக் கொண்டிருக்கின்றது.


அரச படைகள் இதனைச் செய்யவில்லை என அறிக்கை விட்டிருக்கின்றனர். அப்படியானால் குறித்த நினைவுத் தூபி முள்ளிவாய்க்காலில் தொடர்ந்து நிரந்தரமாக இருப்பதில் தமக்கு ஆட்சேபணை இல்லை என்று அவர்கள் கூறுகின்றார்கள் போல் தெரிகின்றது.

விரைவில் எமது மக்கள் புதிய நினைவுத் தூபியை அதே இடத்தில் தாபிக்க அரசாங்கமும் படைகளும் இடமளிப்பார்கள் என்பதா இதன் அர்த்தம்?


அரசாங்கம் எத்தகைய மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி கோவிட் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக படுகொலை செய்யப்பட்ட எமது மக்களை உணர்வு பூர்வமாக நினைவுகூர இப்பொழுதே தயாராகுவோம் என அறைகூவல் விடுத்துள்ளார்.