அதிகாலை நடைபெற்ற அராஜகம்; முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அடித்து உடைப்பு..!

0

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைந்துள்ள நினைவு முற்றத்தின் நான்கு பகுதிகளிலும் இராணுவம் நிறுத்தப்பட்டு அப்பகுதிக்குள் நுழைய இராணுவத்தால் தடை விதிக்கபட்டுள்ளது .

பிரதான வீதியிலிருந்து நினைவு முற்றத்துக்கு செல்லும் வீதிகளில் ஆயுதம் தாங்கிய படையினர் நிறுத்தப்பட்டு உள்ளே எவரும் செல்ல முடியாதவாறு தடை ஏற்படுத்த பட்டுள்ளதோடு முள்ளிவாய்க்கால் கிராமத்துக்கு செல்வோர் வேறு பாதைகளால் செல்லுமாறு இராணுவத்தால் பணிக்கபட்டுள்ளனர்.
நேற்று மாலை நினைவேந்தல் பொது கட்டமைப்பினரால் பொது நினைவுக் கல் ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு இறக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் அப் பகுதிக்கு உடனடியாக இராணுவம், பொலிஸார் வருகை தந்து விசாரணைகளில் ஈடுபட்டதை தொடர்ந்து இராணுவம் அப்பகுதிக்குள் நுழைய தடை விதித்தது.


அப்பகுதிக்குள் செய்தி அறிக்கையிடலுக்காக சென்ற உள்ளூர் பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி இராணுவத்தால் மறுக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.


இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறும் முள்ளி வாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள நினைவு முற்றத்தில் உள்ள நினைவுத் தூபி இன்று அதிகாலை (13) அடித்து நொருக்கப்பட்டுள்ளதோடு நடுகை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல்லும் இரவோடு இரவாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளது.
படையினரின் பூரண கட்டுப்பாட்டில் பிரதேசம் இருந்தவேளை குறித்த சம்பவம் இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு செல்லும் அனைத்து வீதிகளிலும் இராணுவ தடை ஏற்படுத்தப்பட்டு உள்நுழைய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இரவோடு இரவாக நினைவுக்கல் காணாமல் ஆக்கப்பட்டிருந்ததோடு பொது நினைவுத் தூபியும் அடித்து உடைத்தெறிய பட்டுள்ளது.
சுமார் 2000 கிலோவுக்கு அதிகமான எடையை கொண்ட நினைவுக்கல் கனரக வாகனங்களை கொண்டு அகற்றி செல்லப்பட்டுள்ளது.


இரவிரவாக அப்பகுதி முழுவதும் இராணுவம் குவிக்கப்பட்டிருந்ததாகவும் இராணுவ வாகனங்கள் சுற்றி திரிந்ததாகவும் அயலில் உள்ள மக்கள் தெரிவித்தனர்.
உடைக்க பட்டுள்ள நினைவு தூபியை சூழ இராணுவ காலணி அடையாளங்களை ஒத்த அடையாளங்கள் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செய்வது என்பது நாட்டில் ஜனநாயக ரீதியான அடிப்படை உரிமை என்பதும் குறிப்பிடத்தக்கது.