நாட்டில் மோசமடையும் கொரோனா; சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம்..!

0

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 07 ஆம் திகதி வெள்ளி வரை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொரோனா வைரசு தொற்று நிலைமையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 07 ஆம் திகதிக்குப் பின்னர் 10 ஆம் திகதி திங்கட் கிழமை பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து வெள்ளிக் கிமையன்று தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


அதேவேளை அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளையும் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கத்தோலிக்க ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரசு தொற்று நிலைமையின் காரணமாக நேற்று (30) வரையில் நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன. இதேபோன்று கத்தோலிக்க பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை ,இக் காலப்பகுதியில் இணைய சேவையின் ஊடாக கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தக்ஸலாவ மற்றும் குருகுலம் போன்ற தொலைக்காட்சி சேவை நிகழ்ச்சிகளின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.


இதனிடையே, பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரும் அந்த வேலைத் திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.