ரிஷாட் மற்றும் அவரது சகோதரரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி..!

0

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் அவரது சகோதரரான ரியாஜ் பதியுதீனும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணையின் அடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அவர்கள் இருவரையும் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பௌத்த லோக மாவத்தையில் உள்ள அவரின் வீட்டில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.

தன்னைக் கைது செய்வதில் ஏன் இவ்வளவு அவசரம் என கேள்வி எழுப்பிய ரிஷாட் பதியுதீன், தன்னை வருமாறு அறிவித்திருந்தால் தானாக வந்திருக்க முடியும் எனவும் சுட்டிக் காட்டினார்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கைது தொடர்பில் பொலிஸார் பேச்சாளர் அஜித் ரோகண,

ஒருவரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விசேட விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டதன் பின்னர் 72 அவரை மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அதிகாரம் பொலிசாருக்கு உள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.


அவரிடம் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து, தேவை ஏற்படின் 9/1-இன் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்கும் அனுமதியைப் பெற முடியும் எனவும் அஜித் ரோஹண கூறினார்.

எனினும், பாராளுமன்ற உறுப்பினரையும் அவரது சகோதரரையும் நள்ளிரவில் கைது செய்த போது, கைதிற்காக எவ்வித காரணங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை என சந்தேக நபர்களின் சட்டத்தரணியான ருஷ்டி ஹபீப் தெரிவித்தார்.


இவர்கள் குண்டுதாரிகளுக்கு உதவியதாகவோ, ஒத்துழைத்ததாகவோ எவ்வித ஆதாரங்களையும் ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக் குழுவினால் கண்டறிய முடியவில்லை எனவும் சட்டத்தரணியால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவும் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்


ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே அவர்கள் கைது செய்யப்பட்டதாக சரத் வீரசேகர குறிப்பிட்டார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் 8 கோவைகள் தற்போது சட்ட மா அதிபரிடம் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், பொலிஸார் தொடர்ந்து மேற்கொள்ளும் விசாரணைகளின் பின்னர் படிப்படியாக குறித்த நபர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.