சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க கூட்டத்தில் தீ மூட்டிய துணைத் தலைவருக்கு நேர்ந்த கதி..!

0

வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் பொதுக் கூட்டத்தில் பதில் தலைவரால் முன் வைக்கப்பட்ட அறிக்கையினை தீயில் எரித்தமைக்காக சங்கத்தின் துணைத்தலைவர் ஒரு வருடங்களிற்கு அவரது பதவியில் இருந்தும், சங்கச் செயற்பாடுகளில் இருந்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளார்.


இது தொடர்பாக சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் செயலாளர் நாகராஜனால் வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த பொதுச் சபைக் கூட்டத்தில் என்பார்வை அறிக்கையும் ஆண்டறிக்கையும் என்ற புத்தகத்தில் பதில் தலைவரின் அறிக்கையில் இருந்த சில கருத்துக்கள் சபையில் கருத்து மோதலை உருவாக்கியது. இதனை தொடர்ந்து அப்போதைய பதில் தலைவர் பொதுச் சபையில் தனது கருத்துக்கள் தொடர்பில் பொது மன்னிப்பு கேட்டிருந்தார்.

இதனை பொதுச்சபை ஏற்றுக் கொண்டதுடன் புத்தகத்தில் இருந்து அவரது அறிக்கையினை நீக்குவதெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருந்தும் இவரது பதிவினால் கோபமடைந்த துணைத் தலைவர் அவ்வறிக்கையினை புத்தகத்திலிருந்து கிழித்தெடுத்து அதற்கு தீ மூட்டிய போது உறுப்பினர் ஒருவர் அதனை தடுத்து நிறுத்தியிருந்தார்.


அதனை தொடர்ந்து தீ மூட்டியவர் புதிய நிர்வாகத் தெரிவின் போது மீண்டும் துணைத் தலைவர்களில் ஒருவராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இவர்களது செயற்பாடானது சங்கத்தினதும் இந்து சமயத்தினதும் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்துகின்ற வகையில் இருந்த காரணத்தினால் 13.04.2021ல் புதிய ஆட்சிமன்றம் விசேட ஆட்சி மன்றத்தை கூட்டி இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்தனர்.


முடிவில் தற்போதய துணைத்தலைவர் தனது செயற்பாட்டிற்கு மன்னிப்பு கோரினார். இவரது செயற்பாடானது சங்க யாப்பு விதிகளுக்கு முரணாக இருப்பதால் யாப்பு விதிகளின் படி துணைத்தலைவரை ஒரு வருட காலத்திற்கு சங்க நடவடிக்கைகளில் இருந்தும் துணைத் தலைவர் பதவியிலிருந்தும் இடை நிறுத்துவதென்று முடிவு செய்யப்பட்டது. இதனை அவரும் ஏற்றுக் கொண்டார்.


நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இடம் பெற்ற இவ்வாறான செயற்பாடுகளுக்கு சங்கம் தனது மன வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதுடன் எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறாத வண்ணம் இருக்க அனைவரும் அக்கறையுடன் செயற்படுமாறும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். என்று குறித்த அறிக்கையில் உள்ளது.