ஆதிக்க சக்திகளின் அரஜாகப் போக்கு நீங்கி பிலவ வருடம் தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றட்டும்..!

0

மலருகின்ற பிலவ வருடம் தமிழ் மக்கள் தமக்கான உரிமைகள் கிடைக்கப் பெற்று நீதி நிலை நாட்டப்பட்டு சாந்தியையும் சமாதானத்தையும் கொண்டு வருவதாக அமைய வேண்டும் என்பதுடன் தமிழ் மக்களது குறைந்த பட்ச நலன்களையாவது பூர்த்தி செய்ய வேண்டுமென்று எதிர் பார்க்கின்றோம் எனத் தெரிவித்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன்,


தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மலருகின்ற பிலவ வருடம் தமிழ் மக்கள் தமக்கான உரிமைகள் கிடைக்கப் பெற்று நீதி நிலைநாட்டப்பட்டு சாந்தியையும் சமாதானத்தையும் கொண்டு வருவதாக அமையட்டும்.

யுத்தம் முடிந்து பன்னிரண்டு வருடங்கள் கடந்து விட்ட பின்னரும் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்காகவும், எம்மிடம் இருந்து பறிபோன காணிகளை மீளப் பெற்றுக் கொள்வதற்காகவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்காகவும் தொடர்ந்து போராடும் ஒரு போராட்ட களத்தில்தான் இன்னமும் ஈழத் தமிழ் மக்கள் இருந்து வருகின்றனர்.


அது மாத்திரமல்லாமல், தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை அடாத்தாகக் கைப்பற்றுகின்ற நடவடிக்கைகளும் இந்துக் கோயில்களை பௌத்த விகாரைகளாக மாற்றும் நடவடிக்கைகளும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.

இத்தகைய ஒரு சூழ்நிலையில்தான் பிறக்கப் போகும் பிலவ வருடமானது தமிழ் மக்களது குறைந்த பட்ச நலன்களையாவது பூர்த்தி செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கின்றோம்.


கடந்த ஒவ்வொரு புதுவருடத்திலும் மாற்றங்கள் ஏற்படும் தமிழ் மக்களுக்கு புதுவாழ்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்த போதிலும் ஆதிக்க சக்திகளின் ஆணவமும் அரஜாகப் போக்குமே அரங்கேற்றப்பட்டு வருகின்றது.

இந்த நாட்டின் சமபங்காளர்களான தமிழ் மக்கள் மற்றொரு பங்காளியின் அடிமையாக வாழ விரும்பவில்லை என்பதையும் தொடர்ந்தும் அவர்களை அடிமைப்படுத்துவது நாட்டின் முன்னேற்றத்திற்கு உகந்ததல்ல என்பதையும் இந்த புது வருடத்திலாவது பேரினவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.


உலகையே ஆட்டிப்படைக்கும் கொள்ளை நோயான கொரோனா தற்பொழுது இலங்கையின் வடக்கு-கிழக்கு மக்களையும் ஆட்டிப்படைக்கத் தொடங்கியிருக்கிறது. எனவே எமது மக்கள் மிகவும் அவதானமாகவும் சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றியும் பாதுகாப்புடனும் மலருகின்ற புத்தாண்டை வரவேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஒவ்வொரு புதுவருடத்திலும் ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் தென்னிலங்கை அரசியல்வாதிகளிடமிருந்து வருகின்ற உதட்டளவிலான வாழ்த்துகளிலிருந்து இந்தப் புதுவருட வாழ்த்தாவது இதயத்திலிருந்து வெளிவர வேண்டுமென விரும்புகிறோம்.


நாட்டு மக்கள் அனைவருக்கும் எமது பிலவ வருட புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். என தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.