யாழ் மாநகர மேயர் மணி பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் சற்று முன்னர் கைது..!

0

யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் சற்று முன்னர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். நகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பாக நேற்று (08) இரவு சுமார் 8 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட வி.மணிவண்ணன் 6 மணி நேர விசாரணையின் பின்னர் இன்று (09) முன்னிரவு 1.45 மணியளவில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட வி.மணிவண்ணன் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்குப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நகரத்தைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளில் ஓர் அங்கமாக தண்டப் பணத்தை அறவிடும் செயற்பாட்டுக்காக யாழ். நகரக் காவல் படை என்னும் குழு யாழ்ப்பாணம் மாநகர சபையால் உருவாக்கப்பட்டது.


மாநகர சபை ஊழியர்கள் ஐவரைக் கொண்ட இந்தக் குழு பொது இடங்களில் குப்பை கொண்டுவோர், பொது இடங்களில் வெற்றிலை உமிழ்வோரிடம் தண்டம் அறவிடும் செயற்பாட்டில் ஈடுபடும் என்று முதல்வர் வி.மணிவண்ணன் அறிவித்திருந்தார்.

எனினும் அந்தக் குழுவுக்குப் பயன்படுத்திய சீருடை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால் பயன்படுத்தப்பட்ட சீருடை ஒன்றை ஒத்திருந்தது என்று தெரிவித்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இதையடுத்து அந்தக் குழுவின் செயற்பாடுகள் இடை நிறுத்தப்பட்டதுடன், யாழ் மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளரிடம் பொலிஸார் வாக்கு மூலம் பதிவு செய்திருந்தனர்.


அந்த சீருடைகளைப் பெற்ற பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளுக்காக வாக்கு மூலமும், சீருடையும் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தனர்.

மேலும் இன்று இடம் பெற்ற தேசியப் பாதுகாப்பு சபை கூட்டத்திலும் இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் விசாரணைக்கு யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் ஆகியோர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.


சுமார் ஆறு மணி நேர விசாரணையின் பின்னரே யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.