அசாத் சாலியின் வாகனத்தில் கண்டெடுக்கப்பட்ட வெளிநாட்டு ஆயுதங்கள்; பயங்கரவாதிகளுடன் தொடர்பா?

0

மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், அவரது வாகனத்தில் கண்டெடுக்கப்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் பல வெடி மருந்துப் பொருட்கள் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று மாலை கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் அசாத் சாலி கைது செய்யப்பட்டிருந்தார்.


தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலியின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் ஐவர் அடங்கிய சி.ஐ.டி. சிறப்பு பொலிஸ் குழுவொன்றை ஆரம்பித்திருந்தது.

அசாத் சாலியின் கருத்தானது இனங்களுக்கு மத்தியில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையில் அமையப் பெற்றுள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.
இந்த சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக் களத்தினால் விசாரணைகளை நடத்துமாறு , பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அத்மிரல் சரத்வீரசேகர குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.


அதன் பின்னர் சட்டமா அதிபரினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளுக்கு அமையவே அவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.


இதேவேளை கடந்த ஏப்ரல் 21 சர்கானின் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடைபெற்ற காலப் பகுதியில் புத்தளம் வண்ணாத்திவில்லு சம்பவம் உட்பட பல பயங்கரவாத சம்பவங்களுடன் முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் பெயரையும் தொடர்புபடுத்தி செய்திகள் வெளிவந்திருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்குள் இத்தகைய சட்டவிரோத ஆயுதங்கள் எவ்வாறு கொண்டு வரப்பட்டது? அல்லது திட்டமிட்டு வேறு நபர்களால் வைக்கப்பட்டதா? என்பதே எம் அனைவர் முன்னுள்ள வினாவாகும்.