தற்கொலை தாக்குதலுக்கு தயார் நிலையில் இருந்த 15 பெண்கள்; பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் கைது..!

0

தான் உட்பட 15 பெண்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தற்கொலை தாக்குதலுக்கு தயார் நிலையில் இருந்ததாக சஹ்ரான் ஹாசிமின் பயங்கரவாத பயிற்சி வகுப்புக்களில் கலந்து கொண்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட இளம் யுவதி தனது வாக்குமூலத்தில் தகவல் வழங்கியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேக நபரான சஹ்ரான் ஹாசிமின் பயங்கரவாத பயிற்சி வகுப்புக்களில் கலந்து கொண்டதாக கூறப்படும் சந்தேகநபரான 24 வயது பெண்ணொருவர் நேற்று முன் தினம் மாவனெல்ல பகுதியில் வைத்து பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டிருந்தார்.


சஹ்ரான் ஹாசிமின் பயங்கரவாத பயிற்சி வகுப்புக்களில் பங்கேற்ற 6 பெண்கள் கடந்த டிசம்பர் மாதம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இவர்களிடமிருந்து கிடைத்த தகவலுக்கு அமைவாகவே குறித்த சந்தேகநபர் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.


இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான குறித்த இளம் யுவதி பயங்கரவாத தடுப்பு பிரிவில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் தனது வாக்குமூலத்தில் பல தகவல்களை வெளியிட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


இதனடிப்படையில் அந்த பெண் தனது வாக்கு மூலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சஹ்ரான் ஹாசிமினால் முன்னெடுக்கப்பட்ட பயிற்சி வகுப்புகளில் 15 பெண்கள் பங்கேற்றிருந்தாக, அவர்களில் ஐவர் சாய்ந்தமருது தாக்குதலில் மரணித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன் தானும், தன்னுடன் பயிற்சி பெற்ற மேலும் 14 பெண்களும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்த தயார் என உறுதி பூண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.