காதி சட்டத்தினால் பெண்கள், சிறுவர் உரிமைகள் பறிக்கப்படுகின்றது – அதுரலியே ரத்ன தேரர்

0

முஸ்லிம் சட்டத்தின் காதி நீதிமன்றம் மூலமாக அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றதுடன், பெண்களின் உரிமை மட்டுமல்லாது சிறுவர் உரிமைகளும் பறிக்கப்படுகின்றது.

எனவே முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்தை சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரர் சபையில் தெரிவித்தார்.

முஸ்லிம் திருமண மற்றும் விவாகர சட்டத்தை நீக்கும் தனிநபர் சட்டமூலத்தையும் பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.


பாராளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

ஒரே சட்டம் ஒரே நாடு என்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசாங்கம் தமது தேர்தல் கொள்கையில் முன்வைத்துள்ளனர். சகலருக்கும் ஒரே சட்டம், இன மத, பிரதேச பேதமின்றி சட்டம் கையாளப்பட வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும்.

எனினும் முஸ்லிம் சட்டம் இதற்கு மாறுபட்ட ஒன்றாகும். குர்ஆன் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் இந்த சட்டங்கள் குறித்து முஸ்லிம் சமூகத்திடையில் கூட இணக்கப்பாடு இல்லை.


இலங்கையை பொறுத்தவரையில் பத்து வீதமான முஸ்லிம்கள் நாட்டில் வாழ்கின்ற நிலையில் அவர்களின் திருமணம் மற்றும் விவாகரத்து என்பன முஸ்லிம் சட்டத்தின் கீழேயே கையாளப்படுகின்றது.

காதி நீதிமன்றம் என்ற பெயரில் இயங்கும் இந்த முறைமையில் நீதிபதிகளுக்கு சம்பள கொடுப்பனவுகளை வழங்குவது நீதி அமைச்சாகும். ஆனால் திருமண சட்டம் குறித்து நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு எந்தவொரு தெளிவும் இல்லை.


முஸ்லிம் நபர் ஒருவர் வேறு மதத்தில் ஒருவரை திருமணம் செய்து கொண்டால் அவர்கள் முஸ்லிம் மதத்திற்கு மாற வேண்டும். அதன் பின்னர் முஸ்லிம் திருமண சட்டத்தின் கீழ்தான் அவர்கள் வாழவும் வேண்டும்.

ஒருவேளை இவ்வாறு திருமணம் செய்துகொண்டவர்கள் விவாகரத்தை கோரினால் கூட மீண்டும் அவர்கள் மாற்று மதத்திற்கு வருவதற்கோ பொதுவான நீதிமன்றத்தை நாடுவதற்கோ எந்தவொரு வாய்ப்பும் வழங்கப்படுவதில்லை. அவர்கள் காதி நீதிமன்றத்தை நாட வேண்டும் என்றே வலியுறுத்தப்படுகின்றது.


எனவே இவ்வாறான தனி சட்டங்களினால் மனித உரிமைகள் மீறப்படுகின்றது என்பதே உண்மையாகும். எனவே உயரிய பாராளுமன்றத்தில் இந்த முறைமையை மாற்றியமைக்க வேண்டியுள்ளது என்றார்.

மேலும், இது குறித்த பல்வேறு விடயங்கள் சுட்டிக் காட்டி அவர் கருத்து வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது..