கோட்டாபய ராஜபக்ஷவின் அடக்குமுறை, மிலேச்சத்தனமான, சட்ட விரோத ஆட்சிக்கு எதிராகவும், ஆட்சியை கவிழ்க்கும் போராட்டத்தை ஆரம்பித்து விட்டோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்துள்ளார்.
தற்போதய அரசாங்கத்தின் அரசியல் செயல்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் பேசிய அவர்,
அரசியல் அமைப்பை மீறிய குற்றத்தில் எம்மை தண்டிக்க அரசாங்கம் துடிக்கின்றது. ஆனால் அரசியல் அமைப்பை மீறிய குற்றத்தில் ஜனாதிபதியையும், பிரதமரையும், அவர்களின் அமைச்சரவையையுமே முதலில் தண்டிக்க வேண்டும்.
அரசாங்கத்தின் தற்போதய தேசத் துரோக செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் இன்று ஒன்றிணைந்து போராட ஆரம்பித்துள்ளனர். இந்த நிலைமை மிக மோசமாக உருவாகும் என்பது கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், மஹிந்த ராஜபக்ஷவிற்கும் நன்றாகவே தெரியும்.
அதை தெரிந்து கொண்டு இப்போது நாட்டினை அடக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இராணுவ அதிகாரத்தை சகல பக்கங்களிலும் பலப்படுத்தி மக்களுக்கு எதிரான அடக்கு முறையை கையாளும் சூழ்ச்சி இடம் பெற்று வருகின்றது.
இதற்கு எதிரான பலமான சக்தியாக நாம் உருவாவதை அறிந்து கொண்டே எம்மை கட்டுப்படுத்தும் நோக்கில் நீதிமன்றத்தின் வெளியில் நடவடிக்கை எடுக்க சூழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றது.
நீதிமன்றத்தில் தொடுக்கும் எந்தவொரு வழக்கிலும் எம்மை தண்டிக்க முடியாது என்பதற்காக அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணைக்குழுவின் தலைவரும் ஒரு சில உறுப்பினர்களும் மிகப்பெரிய ஊழல்வாதிகள் என்பது கடந்த காலங்களில் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
அதுமட்டுமல்ல, கணக்காய்வு விசாரணைகளை எடுத்துப்பார்த்தால் இவர்களின் உண்மையான முகம் என்னவென தெரியும். இவ்வாறான நபர்களை கொண்டே அரசியல் பழிவாங்கல் குறித்த விசாரணை ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளார்.
ஜனநாயகத்தை மழுங்கடித்து, இராணுவ அடக்குமுறைகளை கையாளும் ஆட்சியையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னெடுத்து செல்கின்றார். இந்த நாட்டில் எந்தவொரு பிரஜையும் சட்டவிரோதமான, அடக்குமுறை தண்டனைக்கு பணிய வேண்டிய அவசியம் இல்லை என்றார்.