நினைவுத் தூபி நிர்மாணப் பணி மீண்டும் ஆரம்பம்; மாணவர்களின் உண்ணாவிரதம் நிறைவு..!

0

யாழ். பல்கலைக் கழகத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிட்டும், இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தும் மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.


இந்நிலையில்,இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைக்க அனுமதிக்க வேண்டும். பல்கலைக்கழக வளாகத்தை விட்டு பொலிஸார் விலக வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தே மாணவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக பிரதான வாயிலுக்கு வெளிப்புறத்தில் இந்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தை மாணவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை,மாணவர்களின் உடல் நிலை மோசமடைந்துள்ளதன் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்திய குழுவொன்று குறித்த இடத்திற்கு விரைந்து மாணவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் யாழ். பல்கலைக் கழகத்தில் மீண்டும் அதே இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியைக் கட்டுவதற்குத் துணைவேந்தர் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதாக உறுதியளித்துள்ளதை அடுத்து உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை நிறைவு செய்வதற்குச் சம்மதித்துள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.


இன்று அதிகாலை 3 மணியளவில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்களைச் சந்தித்த துணைவேந்தர் இந்த வாக்குறுதியை வழங்கியிருக்கிறார்.

அதன்படி இன்று காலை 7 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீளவும் கட்டப்படுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.