க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை பெறுபேறு மார்ச் மாதத்தில்…!

0

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெரும்பாலும் 2021 மார்ச் மாதத்தில் நடைபெறும் என கல்வி அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சாதாரண தர பரீட்சை மார்ச் மாதத்தில் நடைபெற்றால் மூன்று மாத காலப் பகுதிக்குள், அதாவது ஜூன் மாதமளவில் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு பரீட்சைத் திணைக்களத்தினால் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். பரீட்சையை மார்ச் மாதத்தில் நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் அதனை மேலும் ஒத்தி வைக்கும் தேவையில்லை என்றும் அமைச்சர் கூறினார்.


இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கல்வி அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். க.பொ.த உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிப்பதற்கு மாணவர்களுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்.


2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பரீட்சையை நடத்துவதற்கான பொருத்தமான ஒன்பது தினங்கள் தொடர்பில் தீர்மானிப்பதற்காக சுகாதார அதிகாரிகள் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.


இதேவேளை கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் 4 மாத காலத்திற்குள் வெளியிடப்படும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.


பரீட்சைத் திணைக்களத்தினால் பரீட்சை பெறுபேறு பிரதிகளை அடையாளமிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர் 2021 மார்ச் மாதமளவில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.