2020ல் தாக்குதல் நடாத்தவே சஹ்ரான் திட்டமிட்டார்; அவரை ஒருவர் வழி நடத்தினார் – சி.ஐ.டி பணிப்பாளர் பகீர்

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியென கூறப்படும் சஹ்ரான் ஹாஷிமிற்கு மேலே யாராவது இருக்க வேண்டும் என்று அவர் சந்தேகிப்பதாக, சிஐடியின் முன்னாள் மூத்த டிஐஜி ரவி செனவிரத்ன சாட்சியமளித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் (பிசிஓஐ) முன் முதல் முறையாக சிஐடியின் முன்னாள் மூத்த டிஐஜி ரவி செனவிரத்ன சாட்சியமளித்த போது இதனை தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் இந்த சந்தேகம் தனக்கு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட தற்கொலைக் குண்டுதாரிகள் 2020 ஆம் ஆண்டிலேயே இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்.

வவுணதீவு வீதித் தடையில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டமை,
மாவனெல்லவில் புத்தர் சிலைகளை சேதமாக்கியமை, வனாத்தவில்லு தென்னந்தோட்டத்தில் வெடிபொருள் மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை நடத்தியதன் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தாக்குதல்தாரிகளின் பல்வேறு திட்டங்கள் குறித்து ரவி செனவிரத்ன முதன்முறையாக வெளிப்படுத்தினார்.


“வனாத்தவில்லுவில் சிஐடியால் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இருவர் தொடர்ந்து விசாரிக்கப்பட்டனர். இதன்போது, சஹ்ரான் ஹாஷிம் பற்றி சிஐடிக்கு முதலில் தெரிய வந்தது. அதன்பிறகு, ஜனவரி 5, 2019 அன்று வனாதவில்லுவின் கண்டுபிடிப்புகள் குறித்து ஐ.ஜி.பி.க்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. நாங்கள் ஐ.ஜி.பியைச் சந்தித்து கலந்துரையாடினோம்.

இது ஒரு ஆயுதக் களஞ்சியம் மற்றும் பயிற்சி முகாமாகப் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் ரசாயனப் பொருள்களைப் பயன்படுத்தி வெடிபொருட்களைத் தயாரித்ததாகவும், இதனால் எதிர் காலத்தில் பயங்கரவாத தாக்குதல் நடக்கக்கூடும் என்றும் ஐ.ஜி.பிக்கு குறிப்பிட்டோம். அப்போது அவரை தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு வரவழைக்கவில்லை என்று ஐ.ஜி.பி குறிப்பிட்டார். எனவே,
இந்த தகவல் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனுப்பப்படாது என்பதை நான் புரிந்து கொள்கிறேன்” என்றார்.


புத்தளம் வனாத்தவில்லு பகுதியில் வெடிபொருட்கள் கண்டுபிடித்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களில் இருவரை விடுவிக்க பாதுகாப்பு அமைச்சரை பரிந்துரைப்பதில் சட்டமா அதிபரின் ஆலோசனையை அவர் பெறவில்லை என்றும் அவர் ஒப்புக் கொண்டார்.

“விசாரணைகளின் மூலம், சஹ்ரான் 2014ஆம் ஆண்டு முதல் செயற்பாட்டில் இருந்து வந்ததாகவும், 2017 முதல் தாக்குதலுக்கு தயாராகி வந்தது தெரிய வந்துள்ளது. தாக்குதல் குழுக்களை உருவாக்க முடியாதபோதுதான், புத்தர் சிலைக்கு ஒரு கல்லையாவது வீசுமாறு ஷாகித்திடம் சஹ்ரான் கூறினார். பின்னர் சொற்பொழிவுகளின்போது, யாராவது ஒரு போராளியாகவோ அல்லது தாக்குபவராகவோ இருப்பவர் தேவைப்படுவதாக சஹ்ரான் கூறினார்.

சஹ்ரான் நாட்டை விட்டு வெளியேறிய போது, இந்த நாட்டில் இல்லாமல் வேறு நாட்டிற்குச் சென்று வெடிப்புகள் நடத்துவது குறித்து குழு விவாதித்திருந்தது. ஆனால் சஹ்ரான் திரும்பி வந்து நாட்டிலேயே தாக்குதல்களை நடத்த அவர்களை ஊக்குவிக்கிறார். அதன்படி, 2020 ஆம் ஆண்டில் இந்த தாக்குதலை நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் 2019 ஏப்ரல் முதல் வாரத்தில்,சஹ்ரான் திடீரென்று மனம் மாறினார்.

“நாங்கள் இப்போது ஒரு தாக்குதலை நடத்த வேண்டும்.” என அவர் கூறியபோது, குழுவின் மற்றவர்கள் இதற்கு உடன்படவில்லை. ஆனால் ஏப்ரல் 17 க்குள், உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதலை நடத்த அவர்கள் முடிவு செய்திருந்தனர். திகதிகளின் திடீர் மாற்றம் போன்ற விஷயங்களுடன், அவருக்கு மேலே இருக்க யாராவது இருக்க வேண்டும் என்பதை நான் உணர்ந்தேன். நான் ஓய்வு பெறுவதற்கு முன்பு, சஹ்ரானை வழிநடத்திய நபரை நான் கண்டுபிடிக்க விரும்பினேன்” என்று அவர் கூறினார்.


இந்த நேரத்தில், மூத்த அரச சட்டத்தரணி, ஒரு காகிதத்தில் ஒரு நபரின் பெயரை எழுதி, சாட்சியிடம் வழங்கினார்.

அந்த குறிப்பில் குறிப்பிடப்பட்ட நபராக இருக்கலாம் என்றும், அந்த நபருடன் சஹ்ரான் பணியாற்றியதாக தகவல்கள் இருப்பதாகவும் ரவி செனவிரத்ன குறிப்பிட்டார்.

“தாக்குதல் இலக்குகளிற்கு செல்பவர்கள், ஏதாவது காரணத்தினால் தாக்குதலை நடத்த முடியாமல் போனால், அவர்கள் திரும்பி வந்து தங்குவதற்கு ஒரு இடத்தை தயார் செய்திருந்தனர். இது கொழும்பில் உள்ள ஒரு மசூதி. யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, ஒரு பிரமுகரை சந்திக்க வந்ததாக அவர்கள் தெரிவிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, தாக்குதலாளியை அழைத்துச் செல்ல மற்றொரு நபர் வந்து, அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்துவதே திட்டம். ”

தாக்குதலாளிகளை அழைத்துச் செல்ல நியமிக்கப்பட்ட நபரின் பெயரையும் சாட்சி எழுதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் சமர்ப்பித்தவர் சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.

ஆணைக்குழுவின் தலைமை நீதிபதி இதன்போது ரவி செனவிரத்னாவிடம் கேள்வியெழுப்பினார். தாக்குதலுக்குப் பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது, தாக்குதலுக்கு முந்தைய நாள் ஈஸ்டர் வழிபாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என்று தனது தந்தை தன்னிடம் கூறியதாக ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களின்படி, மாவனெல்ல மற்றும் வனாதவில்லு சம்பவங்கள் பற்றிய விசாரணை நடத்தி வந்த சி.ஐ.டி போலீஸ் சார்ஜென்ட் நந்தலால், ஏப்ரல் 20 ஆம் திகதி இரவு ஹரின் பெர்னாண்டோவின் தந்தையிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பைப் பெற்றிருந்தார்.


ஆதாரங்களின்படி, தாக்குதல் தொடர்பாக ஹரின் பெர்னாண்டோவின் தந்தைக்கு நந்தலால் செய்தி அனுப்பியிருந்தார். அப்படியானால், ஏப்ரல் 20 இரவு தாக்குதல் நடக்கும் என்பதை சிஐடி அதிகாரிகள் எவ்வாறு அறிந்து கொள்வார்கள்? ”

கேள்விக்கு பதிலளித்த அவர், “இந்த அதிகாரி நந்தலால் எவ்வாறு தகவல் பெற்றார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எஸ்ஐஎஸ் இயக்குனர் நிலந்த ஜெயவர்தன ஏப்ரல் 20 இரவு, மறுநாள் ஒரு தாக்குதல் நடக்கும் என்று எனக்குத் தெரிவித்தார். நான் உடனடியாக அந்த தகவலை ஏஎஸ்பி விக்ரமசேகர மற்றும் சிஐடி இயக்குனர் எஸ்எஸ்பி சனி அபேசேகரவுக்கு அனுப்பியிருந்தேன். ”

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி காலையில், அரச புலனாய்வு சேவையின் இயக்குநர் நிலந்த ஜெயவர்த்தனிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. மிகக் குறுகிய காலத்திற்குள் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்று குறிப்பிட்ட அந்த குறுஞ்செய்தியை, குண்டு வெடிப்புக்குப் பிறகு பார்த்ததாகவும் கூறினார்.