கொரோனா தொற்றின் போது இணையத்தின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு கற்பிக்கும் முறை தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பல சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் (சி.டி.எஸ்.யூ) தெரிவித்துள்ளது. சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க ஊடகம் ஒன்றிடம் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணையங்களுக்கான வசதிகளை கொண்டிருக்கவில்லை.
அத்துடன் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் “மொபைல் சிக்னல்” என்ற தொலைபேசியின் அலை வீச்சின் செயற்பாட்டு வலிமை மோசமாக உள்ளது.
தொடர்பு கொள்ள பயன்படுத்தப்படும் தரவுகளும் மிகவும் விலை உயர்ந்தவையாகவும் மற்றும் போதுமானதாகவும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் 30 சதவிகித மக்களும், மேல் மாகாணத்தில் 50 சதவிகித மக்களும் ஏனைய மாகாணங்களில் 20 முதல் 40 சதவிகித மக்களும் இணைய வசதிகளை கொண்டுள்ளனர்.
எனவே கொரோனா தொற்று நிலைமை கட்டுப்படுத்தப்பட்ட நிலைக்கு வரும் வரை தொலைக்காட்சி அலைவரிசைகளின் ஊடாக பாடங்களை நடத்துவதே சிறந்த தொலைதூர கல்வி தளமாகும் என்று ஜெயசிங்க சுட்டிக் காட்டியுள்ளார்.
இதேவேளை இணையக்கல்வியானது. மாணவர்கள் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் அவர்கள் கையடக்கத் தொலைபேசிகள், கணணிகளை போன்றவற்றில் அடிமையாகி விட்டனர் என்றும் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது என்றும் ஜெயசிங்க குறிப்பிட்டுள்ளார்.