“கருணா” ஒரு காமெடி பீஸ்; மனிதனாக கூட நான் கணக்கில் எடுப்பதில்லை..!

0

கிழக்கு மாகாணத்தில் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தொடர்பாக சில குற்றச் சாட்டுகள் மக்கள் மத்தியில் உள்ளதால் இவர் மீதான விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வில்லியம் மண்டபத்தில் தனது பிறந்த நாள் தினத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமை இடம் பெற்ற இரத்ததான முகாமில் இரத்ததானம் வழங்கியபின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினை அவர் தெரிவித்துள்ளார்.


தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

விநாயகமூர்த்தி முரளிதரன் என்பவரை நான் ஒரு அரசியல்வாதியாக கூட கணக்கெடுப்பதில்லை ஏன் ஒரு மனிதனாக கூட கணக்கெடுப்பதில்லை. அவர் ஒரு காமெடி பீஸ்.

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு என்பது நாட்டின் ஜனாதிபதி அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லப்பட்டது. அந்த வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதில் தற்போது 34 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 2ஆம் மற்றும் 3ஆம் கட்டங்கள் வழங்கப்படவுள்ளது


கருணா அண்மையில் ஒரு கருத்தை வெளியிட்டதனை ஊடகங்கள் ஊடாகப் பார்த்தேன். மட்டக்களப்பில் இருக்கின்ற அமைச்சர் 20 ஆயிரம் ரூபாவை அந்த வேலைவாய்ப்பு விண்ணப்பங்களுக்கு வாங்கி வேலைவாய்ப்பை கொடுத்ததாக சொல்லியிருக்கின்றார்.

அந்த படிவத்தை பிரதேச செயலகங்களிலே பெற்று குறித்த வறுமைக் கோட்டின் கீழ் வாழுகின்றவர்கள் வேலைவாய்ப்பினை பெற்றிருக்கின்றார்கள் இது இந்த கருணாவுக்கு ஒரு வகை வயிற்றெரிச்சலின் வெளிப்பாடு.


மக்கள் மத்தியில் பிரபலமானவர்களின் பெயரை உச்சரித்து அவர் பிரபலமாக வேண்டும் என நினைப்பவர்தான் கருணா ஆகவே அவர் என்ன பேசினாலும் நான் அதை கணக்கெடுப்பதில்லை.

கிழக்கு மாகாணத்தில் கருணா தொடர்பாக சில குற்றச் சாட்டுகள் மக்கள் மத்தியில் உள்ளது. இதனை அரசாங்கம் விசாரிக்க வேண்டும்.

அண்மையில் வழங்கப்பட்ட வேலைவாய்ப்புக்கு 20 ஆயிரம் ரூபா ஒரு விண்ணப்பத்திற்கு நான் வாங்கியதாக கருணா நிருபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவேன் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.


இதேவேளை உலகமே வியந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டாம் நிலைத் தளபதியாகவும், கிழக்கின் சிறப்புத் தளபதியாகவும் செயற்பட்ட கருணா, அலிசாகீர் மவுலானா போன்ற புல்லுருவிகளுடன் அற்ப சலுகைக்காக இணைந்து விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்தி பல இலட்சம் உறவுகளின் அழிவுடன் முள்ளிவாய்க்காலில் போராட்டம் முற்றுப் பெறுவதற்கு காரணமாக அமைந்தார்.


உலக வரலாற்றில் காட்டிக் கொடுத்ததால் அழிந்தவர்களின் வரலாற்றை எடுத்து நோக்கும் போது அங்கு காட்டிக் கொடுத்தவர்கள் எங்கும் சிறப்பாக வாழ்ந்ததாக வரலாற்றில் இல்லை. இதற்கு கண்டி இராட்சியமாக இருக்கட்டும், பண்டார வன்னியன் வரலாறாக இருக்கட்டும், தாயகத்தில் ஒட்டுக் குழுக்களாக இருக்கட்டும் எங்கும் விதிவிலக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.