கொரோனா ஒழிப்புக்கு வட மாகாணத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை – கஜேந்திரன் PM

0

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து தனிமைப்படுத்தல் சட்டத்தை வடக்கு, கிழக்கில் மக்களை பழிவாங்கும் கருவியாக பொலிஸார் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகளை சபையில் முன்வைத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக வட மாகாணத்துக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க் கிழமை, மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுக்க விதிகள் பிரகாரம் வெளியிடப்பட்ட வர்த்தமானிகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.


இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கையில் நாடளாவிய ரீதியில் வைத்தியர்களும், தாதியர்களும் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுகின்றனர். இந்த விடயத்தில் வடக்கு, கிழக்கில் பணியாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் வைத்திய நிபுணர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஆனாலும் வடக்கு, கிழக்கில் கொவிட் -19 சிகிச்சை வைத்திய நிலையங்களை உருவாக்குவதற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. நிதி பிரச்சினை காரணமாக வடக்கு கிழக்கில் கொரோனா நோயாளர்களை கையாள்வதில் சிக்கல் நிலைமை காணப்படுகிறது.


வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் 12ஆயிரம் நோயாளர்களால் பயன் படுத்தப்பட்டு வந்த வைத்திய சாலை கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் வைத்திய சாலையாக மாற்றப்பட்டுள்ளது. அதன் காரணமாக இங்கு சிகிச்சைக்கு செல்லும் மக்கள் 40 கி.மீ. தொலைவில் உள்ள பருத்தித்துறை வைத்திய சாலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு போக்குவரத்து வசதிகள் கிடையாது. இங்கு 12 ஆயிரம் நோயாளர்களை கருத்திற் கொண்டு அவர்களுக்கு மாற்று வைத்திய முறைகளை பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை வடக்கு, கிழக்கில் மக்களை பழிவாங்கும் கருவியாக பொலிஸார் பயன்படுத்துகின்றனர். சு.ப.தமிழ் செல்வனின் நினைவு தினத்தை அனுஷ்டிப்பதற்கு முயல்வதாக கூறி எமது காரியலத்திற்கு சென்றுள்ள பொலிஸார் அங்கிருந்தவர்களுக்கு அச்சுறுத்தலை வித்துள்ளனர். இவ்வாறான செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.


கொரோனா தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை பொலிஸார், தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை கருவியாக பயன்படுத்துகின்றனர். இதற்கு அரசாங்கம் அனுமதியளிக்க கூடாது. யுத்த காலத்தில் பாதிப்புக்கு உள்ளான முன்னாள் போராளிகள் 100 கி.மீ.வரை சென்று சிகிச்சையை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

வடமராட்சியிலிருந்து யாழ்ப்பாணம் அல்லது வவுனியாவுக்கு இவர்கள் செல்ல வேண்டியுள்ளது. போக்குவரத்து வசதிகள் இல்லை என்பதுடன், அவர்கள் கையில் பணமும் இல்லை. அவர்களுக்கான மருத்துவ வசதிகளை அந்த அந்த பிரதேசங்களிலேயே செய்துக் கொடுக்க வேண்டும்.


வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைளில் வைத்திய நிபுணர்களுக்கும் வைத்தியர்களுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது. அங்கீகரிக்கப்பட்ட ஆளணிகள் போதாதுள்ளது. அதனால் சிறந்த சேவையை வழங்க முடியாதுள்ளது. மக்கள் தொகை மாத்திரம் வைத்துக்கொண்டு வைத்தியர்களை தீர்மானிக்க முடியாது.

24 மணித்தியாலமும் இயங்கு நோயாளர் விடுதிகள் வடக்கில் பல பிரதேச வைத்திய சாலைகளில் உள்ளன. ஒரே ஒரு வைத்தியருடன் அவற்றை சீராக இயக்க முடியாது. அதேபோன்று வடக்கில் 285 வைத்திய அதிகாரிகளுக்கு அதாவது 33 சதவீதமான வைத்திய அதிகாரிகளுக்கு வெற்றிடங்கள் உள்ளன. வடக்கில் உள்ள 111 வைத்திய சாலைகளில் 37 வைத்திய சாலைகளுக்கு இன்றுவரை ஒரு வைத்தியர் கூட நியமிக்கப்படவில்லை.


பெருமளவான பிரதேச வைத்திய சாலைகளில் ஒரு வைத்தியர் மாத்திரமே கடமையில் உள்ளனர். இதனால் நோயாளர் விடுதிகள் இயங்குவதில்லை. இந்த நிலைமைகள் சீர் செய்யப்பட வேண்டும் என்றார்.