இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி 43 வயதான ஆணுக்குத் திருமணம் செய்யப்பட்ட 13வயது சிறுமி..!

0

பாகிஸ்தானில் கடத்தப்பட்டு மதம் மாற்றப்பட்ட பின்னர் 43 வயதான ஆணுக்குத் திருமணம் செய்விக்கப்பட்ட 13 வயது சிறுமியை மீட்டு பாதுகாப்பு இல்லமொன்றுக்கு அனுப்புமாறு சிந்து மாகாண மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என பாகிஸ்தானின் மனித உரிமைகள் விவகார அமைச்சர் ஷிரீன் மஸாரி தெரிவித்துள்ளார்.

அர்ஸு (Arzoo) எனும் 13 வயதான கிறிஸ்தவ சிறுமி வீட்டிலிருந்து கடத்தப்பட்டு, இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டு, 43 வயதான வயதான சயீட் அலி அஸ்ஹர் என்பவருக்குத் திருமணம் செய்விக்கப்பட்டிருந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டது.


சயீட் அலி அஸ்ஹர், அவரின் சகோதரர் ஷாரிக், மோஷின் மற்றும் நண்பர் டானிஷ் ஆகியோருடன் இணைந்து சிறுமி அர்ஸுவை கடத்தினார் என சிறுமியின் தந்தை குற்றம் சுமத்தினார்.

இது தொடர்பாகில் பாகிஸ்தானின் மனித உரிமைக் குழுக்கள் கண்டனம் தெரிவித்தன. இவ்விடயம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மனித உரிமை செயற்பாட்டாளரான சட்டத்தரணி ஜிப்ரான் நஸீர், சிறுமியின் குடும்பத்தினர் சார்பில் சட்டநடவடிக்கையில் ஈடுபட்டார்.


பின்னர் சிறுமியின் கணவர் சயீட் அலி அஸ்ருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ததுடன் அவரின் சகோதரர்கள், ஷாரிக், மோஷின், நண்பர் டானிஷ் ஆகியோரை கைது செய்தனர்.

சிறுமியை பாதுகாப்பு இல்லமொன்றுக்கு அனுப்புமாறு பெற்றோர் விடுத்த கோரிக்கையை கராச்சியிலுள்ள நீதிவான் நீதிமன்றமொன்று நிராகரித்தது. சிறுமியின் கணவர் சயீட் அலி அஸ்ஹரை கைது செய்வதற்கு எதிராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை சட்டத்தரணி ஜிப்ரான் நஸீர் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், மேற்படி சிறுமியை மீட்டு பாதுகாப்பு இல்லத்துக்கு அனுப்புமாறு பொலிஸாருக்கும் சம்பந்தப்பட்ட ஏனைய அதிகாரிகளுக்கும் சிந்து மாகாண மேல் நீதிமன்றம் ( Sindh High Court) உத்தரவிட்டுள்ளது என பாகிஸ்தானின் மனித உரிமைகள் விவகார அமைச்சர் கலாநிதி ஷிரீன் மஸாரி (Dr Shireen Mazari) இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.


இதேவேளை, சிறுமியின் வயதை உறுதிப்படுத்துவற்காக மருத்துவ சோதனை மேற்கொள்றுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சட்டத்தரணி ஜிப்ரான் நஸீர் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் வயது, அவர் பலவந்தமாக மதம் மாற்றப்பட்டாரா, இத்திருமணம் சட்ட ரீதியானதா என்பன ஆராயப்பட வேண்டிய விடயங்கள் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


சிறுமி அர்ஸுவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தானில் #JusticeForArzoo எனும் ஹேஷ்டெக் சகிதம் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.