ஊரடங்குச் சட்டத்தை மீறிய 1480 பேர் கைது; 218 வாகனங்கள் பறிமுதல்..!

0

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறிச் செயற்பட்டதாக இது வரை 1480 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 218 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன் போது முகக்கவசங்கள் அணியாத மற்றும் நபர்களுக்கு இடையில் இடைவெளி பேணாமை தொடர்பில் மாத்திரம் 39 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப் படுத்துவதற்காக மேல் மாகாணம், குளியாப்பிட்டி ஆகிய பகுதிகளில் 117 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊரடங்குச் சட்டதை மீறியமை தொடர்பில் நேற்று முன்தினம் வெள்ளிக் கிழமை காலை ஆறு மணி தொடக்கம் இன்று சனிக்கிழமை காலை ஆறு மணிவரையில் 221 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதன் போது அவர்கள் பயன்படுத்திய 40 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதற்கமைய இதுவரையில் ஊரடங்குச் சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டதாக அதிகூடிய தொகையானோர் இதன் போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியில் இடைவெளி பேணாதோர் மற்றும் முகக் கவசங்கள் அணியாதோரை கைது செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த போதிலும் நேற்றுமுன்தினம் வரையில் பொலிஸார் அத்தகைய ஒருவரையும் கைது செய்யவில்லை. அறிவுறுத்தல்களை மாத்திரமே வழங்கி வந்தனர்.


எனினும் நேற்று வெள்ளிக் கிழமை முதல் இத்தகைய நபர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப் பட்டுள்ளதுடன், அதற்கமைய இது தொடர்பில் 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் களுத்துறை, கம்பஹா, நீர்கொழும்பு மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் திவுலப்பிட்டி மற்றும் மினுவாங்கொட ஆகிய பகுதிகளுக்கு கடந்த மாதம் 4 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறியதாக 1480 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் போது 218 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.