ஐக்கிய மக்கள் சக்தி கூட்டத்தில் எம்பிகள் ரகளை; வெளியேற்றப்பட்ட ரிஷாட்டின் கட்சி எம்பி..!

0

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடந்த போது பெரும் அமளி ஏற்பட்டது.

நேற்று அரசுக்கு ஆதரவளித்த எதிர்க்கட்சி எம் பிக்கள் எவரும் இதில் கலந்து கொள்ளவில்லை. இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவை வழங்கிய முஷாரப் எம் பி கூட்டத்தில் கலந்து கொண்ட போதும் அவர் கடுமையான எதிர்ப்பினையடுத்து வெளியேற்றப்பட்டார்.


ஹரீன் பெர்னாண்டோ , ராஜித உட்பட்ட பல எம் பிக்கள் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முஸ்லீம் எம்பிக்கள் அப்படி நடந்து கொண்டமை அவர்களின் கட்சித் தலைவர்களுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லையென்றும் இதுவரை அந்த எம்பிக்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமை அதனையே உணர்த்துவதாகவும் பல எம் பிக்கள் சத்தமிட்டனர்.

அரவிந்த்குமார் எம் பியை கட்சியிலிருந்து நீக்கியமைக்காக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு சிலர் வாழ்த்து தெரிவித்தனர்.


ஒரு கட்டத்தில் ஹக்கீம் , றிசாட் ஆகியோர் மீது சில எம் பிக்கள் தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களை செய்த போது மனோ கணேசன், திகாம்பரம் ஆகியோர் அவற்றை நிராகரித்து குரல் கொடுத்தனரென அறிய முடிகிறது.

“அரசுக்கு ஆதரவளித்தது தவறு. ஆனால் அதனை ஒரு கொலைக் குற்றம் போல சித்தரித்து அரசுடன் இணைய முடியாதென நீங்கள் கடிவாளம் போட முடியாது. நீங்கள் ஆட்சியில் இருந்தாலும் இதனையே செய்திருப்பீர்கள்.


நாங்கள் உங்களுக்கு தேவையில்லையென்றால் சொல்லுங்கள் அதற்காக தமிழ் முஸ்லிம் தலைவர்களை இளக்காரமாக கருதாதீர்கள்..” என இரு முஸ்லீம் கட்சிகளுக்கும் வக்காளத்து வாங்கி மனோ கணேசனும் , திகாம்பரமும் இங்கு தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் அரசுக்கு ஆதரவளித்த முஸ்லிம் எம் பிக்கள் மீது நடவடிக்கை எடுக்காவிடில் அவர்களோடு ஹக்கீமையும் ,ரிசாட்டையும் சேர்த்து வெளியேற்ற வேண்டுமென இந்த கூட்டத்தில் வலியுறுத்தப் பட்டுள்ளதாக அறிய முடிந்தது.


மக்கள் எதிர்க் கட்சிகளுக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பியது பெயரளவில் உள்ள ஜனநாயகத்தை பாதுகாக்கவே தவிர ஆளும் அரச இயந்திரத்தை அற்ப சலுகைக்காக பாதுகாக்கவல்ல என்பதை மனோ கணேசன் உணர்ந்து தேவையற்ற நபர்களுக்காக தனது கெளரவத்தை கீழிறக்கிக் கொள்ளக் கூடாது.