ரியாஜ் பதியூதீனின் கைதைத் தடுக்கும் ரீட் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!

0

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனின் சகோதரர் ரியாஜ் பதியூதீன் தாக்கல் செய்த ரீட் மனுவை மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தற்காலை தாக்குதல்கள் தொடர்பில் தன்னை மீளவும் கைதுசெய்ய மிகத் தீவிரமாக முயற்சிகள் இடம்பெறும் நிலையில், கைதுசெய்வதை தடுக்கும் வகையிலான உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி ரியாஜ் பதியூதீன் கடந்த 13 ஆம் திகதி மனுத் தாக்கல் செய்துள்ளார்.


குறித்த மனுவில் பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, சி.ஐ.டி.யின் முன்னாள் பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதசிங்க, சி.ஐ.டி. பணிப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான பிரசன்ன டி அல்விஸ், சி.ஐ.டி.யின் பிரதான பொலிஸ் பரிசோதகர் மஹிந்து அபேசிங்க உள்ளிட்ட 7 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளன.


உயிர்த்த ஞாயிறு தாக்கல் தொடர்பில் தன்னை கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி சி.ஐ.டி.யினர் சந்தேகத்தின் பேரில் தன்னை கைதுசெய்ததாகவும், அது முதல் நீண்ட நாட்களாக தன்னை தடுப்பு காவலில் வைத்து விசாரித்ததாகவும் ரியாஜ் பதியூதீன் மனுவில் சுட்டிக் காட்டியுள்ளார்.‍


இந் நிலையில் தனது சொத்துக்கள், வங்கிக் கணக்குகள், வீடுகள், வரத்தகம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்த சி.ஐ.டி. தனக்கு எதிராக குற்றம் சுமத்த சாட்சியங்கள் இல்லாமையால் தன்னை விடுவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.