சொந்தங்களால் சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்த முரளி..!

0

முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதுக்கு எதிரான குரல்களின் சமூக அர்த்தத்தைத் திசை திருப்புவதை “சிலர்“ முழு நேர வேலையாக்கிக் கொண்டுள்ளார்கள். பௌத்த மகாசங்கம் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் இவர்கள் ஏன் தலையில் தூக்கிப் போட்டுக் கொள்கின்றார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

முரளியின் கதையைத் திரைப்படமாக எடுக்கும் முயற்சிகளை யாரும் எதிர்ப்பதாகத் தெரியவில்லை. விஜய்சேதுபதி நடிக்க கூடாது எனக் கோரிக்கை / எதிர்ப்பு தான் முன்வைக்கப்படுகின்றது.

இந்த எதிர்ப்பின் உருப்பெறும் காரணத்தைப் பொதுமைப் படுத்தி அடையாளப்படுத்திக் கொள்வது அவசியமானது. மிதமிஞ்சிக் குடிக்கும் மனிதனைப் பார்த்து ”மனிதனாய் இரு” என்று கூற முடியும், ஆனால், ஏராளமான மனிதர்களை விழுங்கும் முதலையிடம் “நீ முதலையாய் இரு” என்று கூற முடியாது.

விஜய்சேதுபதியை பார்த்து ஒடுக்குமுறையாளர்களின் கருவி ஆகாதே என்று சொல்ல முடியும். முரளிதரனைப் பார்த்து அப்படிச் சொல்ல முடியாது.

இலங்கை தீவில் சிறிலங்கா எனும் தேசிய அரசு இயங்க ஆரம்பித்த 1948 ஆம் ஆண்டு முதல் , பேரினவாத கருத்தியலை வளர்த்தெடுத்து தமிழ் பேசும் மக்களை இனவழிப்பு செய்து வருகின்றார்கள். இதன் உச்சக் கட்டமாக 2009 இல் மிக அவலமான இனப்படுகொலையையும் செய்திருந்தார்கள்.

2009க்கு பின்னர், இனவழிப்பு நடப்பதையோ, இனப்படுகொலை நடந்ததையோ மறுப்பதை ஒடுக்கும் பேரினவாத முகாமை சேர்ந்தவர்களும், இதை எதிர்ப்பதை ஒடுக்கப்படுவோர் சார்பானவர்களும் பண்பாடாக்கிக் கொண்டுள்ளார்கள்.

இந்த எதிர் எதிரான அரசியல் பண்பாடுகள் முரண்பட்டுக் கொள்ளும் ஒரு சந்தர்ப்பம் தான் ”800“ திரைப்பட விவகாரம். இனப்படுகொலையை – இனவழிப்பை – இன ஒடுக்குமுறையை எதிர்க்கும் பண்பாட்டின் விளைவே “800“ திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என எழுந்திருக்கும் எதிர்ப்பு.

முரளிதரன் தனது அப்பட்டமான சுயநலத்துக்காக இனவழிப்பு எல்லாம் ஒன்றும் நடக்கவில்லை, தமிழர்கள் இங்கு வாழ ஒரு தொந்தரவும் இல்லை என “பேரினவாதத்தின் தன்னார்வ தொண்டர் போல்“ இராஜபக்சக்களின் கருவியாகப் பிரச்சாரம் செய்து வருகிறார்.

விஜய்சேதுபதிக்கு தமிழ் சினிமா இரசிகர்கள் – மக்கள் – மத்தியில் இருக்கும் அங்கீகாரமே இந்த படத்தில் நடிக்க வைக்கப்படக் காரணமாகின்றது. இந்த அங்கீகாரம் என்பதிலிருந்து தான் விஜய்சேதுபதியின் சினிமா சந்தை பெறுமதி உருவாக்கம் பெற்றது.

எனவே, மக்கள் அல்லது தமிழ் சினிமா இரசிகர்கள் தமது பொது அரசியல் அபிலாசையை மதிக்க வேண்டும் எனக் கேட்கின்றார்கள். இதைப் பற்றிய தீர்மானத்தை “இலாப நட்டங்களைக் கணக்கு பார்த்தாவது“ விஜய்சேதுபதி எடுப்பார்.
ஒருவேளை விஜய்சேதுபதி இல்லாமல் வேறு புது நடிகரை வைத்து இந்த படத்தை எடுத்திருந்தால் இந்தளவுக்குப் பிரச்சினைகள் எழுந்திருக்காது.

ஆனால், சினிமாவை தாண்டி இந்த எதிர்ப்பு ஒரு செய்தியைச் சொல்கின்றது. தமிழ் மக்கள் (தமிழ்நாடு , இலங்கை) சிறிலங்கா அரசு நடத்திவரும் இனவழிப்பையும், நடத்திய இனப்படுகொலையையும் எதிர்க்கின்றார்கள்.

தமது அபிமானத்தையும், ஆதரவையும் பெற்றிருக்கும் விஜய்சேதுபதியை, இனப்படுகொலை, இனவழிப்பு நடத்தியவர்களை ஆதரிக்கும் முரளிதரனின் கதையைச் சொல்லும் படத்தில் நடிக்கக் கூடாது என எழுந்திருக்கும் குரல் பேரினவாதத்தின் முகத்தில் விழும் அடி தான்.

இந்த பிரச்சினையை அவதானிக்கும் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு விடயம் தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு நீதி கோரி நிற்கின்றார்கள் என்பதையும், இனவழிப்பிலிருந்து தம்மைப் பாதுகாக்கும் உரிமையை நிலைநாட்ட முன்னிற்கின்றார்கள் என்பதையும் தான்.

அடுத்தது முரளிதரன் ஏன் இந்த பேரினவாதிகளின் கருவியாகி இருக்கின்றார்? இந்த படக்குழுவினரே முரளியின் கிரிக்கெட் வரலாறு மாத்திரம் தான் சொல்லப்படும், அவரின் இருண்ட பக்கங்களைக் காட்ட மாட்டோம் எனச் சொல்லிவிட்டார்கள். அவருக்கு இருண்ட பக்கம் ஒன்று இருக்கின்றது என்பதைப் புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை.

முரளிதனின் பந்துவீச்சு திறமையை யாரும் அகௌரவ படுத்தவில்லை. உரிய மரியாதையும், அங்கீகாரமும் கொடுத்தே இருக்கின்றார்கள். அவர் சுழல் பந்து வீச்சில் இயந்திரம் போன்றவர். தொலைக்காட்சியில் பார்ப்பதை விட அருகிலிருந்து பார்த்தால் அவரின் அபாரத் திறமை புரியும்.

அவரின் கை அமைப்பில் இயற்கையாக இருக்கும் வளைவு காரணமாகப் பந்தை எரிவது போல் சந்தேகம் எழும். இதனால் சில பிரச்சினைகளை எதிர்கொண்டார். 2005 ஆம் ஆண்டு பந்து வீசம் போது கைவளைய கூடிய அளவை சர்வதேச கிரிக்கெட் சம்ளேனம் மாற்றி அமைத்த பின் இவருக்குப் பிரச்சினைகள் வரவில்லை.

இங்கு கிரிக்கெட் வீரர் முரளி பற்றி யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. கிரிக்கெட் விளையாடும் போது சிங்கள ஊடகங்கள் இனப்பிரச்சினை, யுத்தம் தொடர்பாக இவரிடம் வலிந்து கேட்ட கேள்விக்கு இவர் அளித்த பதில்கள் கூட பிரச்சினையே இல்லை. அவர் தமிழ் தெரியாது என்று சொல்லியதையோ, தமிழில் கதைக்காததையோ கூட பெரிதாகக் கணக்கிலெடுத்தாக தெரியவில்லை.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின் இவர் குடும்ப வியாபாரத்துக்காகச் செய்து வரும் மோசடியான வேலைகள் தான் பிரச்சினைக்குரியது.

இந்த மோசடிகளை மூடி மறைக்க அல்லது பிரச்சினைகள் வருவதைத் தவிர்க்கப் பேரினவாதத்துக்குத் தொண்டு செய்கின்றார். இதன் மூலம் சிங்கள மக்களிடம் தன்னை தமிழரின் அபிலாசைக்கு எதிரான தேசபற்றாளராக காண்பித்து மோசடிகளுக்கு எழும் எதிர்ப்பை திசைதிருப்பி விடமுடியும்.

இதையே பயன்படுத்தி இராஜபக்சாக்கள் இவரைப் பயன்படுத்துகின்றார்கள். அவரும் தாராளமாகப் பயன்பட்டுப் போகின்றார். எடுத்துக்காட்டுக்குச் சிலதை சொல்லலாம்.

1) எதனோல் கடத்தல் மோசடி
***********************
முத்தையா முரளிதரன், மற்றும் அவரது சகோதரர்களான முத்தையா சசிதரன், முத்தையா சிறிதரன், முத்தையா பிரபாகரன் ஆகியோருக்கு சொந்தமான கம்பனி ஒன்றின் மூலம் இலங்கையின் பிரதான சாராய உற்பத்தி கம்பனிகளுக்கு “எதனோல்“ இறக்குமதி செய்து கொடுக்கின்றார்கள்.

நீண்டகாலமாக வரி ஏய்ப்பு செய்தும், கள்ளத்தனமாகவும் இவர்கள் எதனோல் கடத்தி வந்த விடயம், முரளி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் காலத்தில் அம்பலத்துக்கு வந்தது.

ஒரே ஒரு சம்பவத்துக்கு மாத்திரம் மூன்றரை கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இங்கிருந்து தான் இராஜபக்சகளுடனான அரசியல் சகவாசத்தை ஆரம்பித்தார் முரளி. இதன் காரணமாக முரளியின் சகோதரர்கள் அபராதம் செலுத்துவதிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்.

இந்த சம்பவத்துடன் சேர்ந்தே, 400 கோடி ரூபாய் வரையிலான எதனோல் இறக்குமதி தொடர்பான விடயம் வெளிக்கொண்டுவரப்பட்டு பின்னர் கிடப்பில் போடப்பட்டது.

நியாயமாகச் செலுத்த வேண்டிய மூன்றரை கோடி வரிப்பணத்தைச் செலுத்தவே மூக்கால் அழுபவர்கள் தான், கோடிக் கணக்கில் செலவழித்து சேவை செய்வதாக சொல்லிக் கொள்கின்றார்கள். இந்த சமூக சேவையின் பின்னால் இருக்கும் கசப்பான உண்மை என்னவெனில் “கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குதல்” தான். மோசடியாகக் கடத்தி வந்த எதனோலை விற்றுச் சேர்த்த பணத்தை நியாயமாகக் கணக்குக் காட்ட முடியாது தான்.

இந்த எதனோல் மோசடியுடன் மகிந்த இராசபக்ச அரசாங்க அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, அருந்திக்க பெர்னோன்டோ ஆகியோருக்கும் பங்கு இருந்தது. ஜோன்சன்டன் பெர்னோன்டோவுக்கு சொந்தமான சாராய உற்பத்தி கம்பனி ஒன்று இருக்கின்றது. அருந்திக்க பெர்னான்டோவின் உறவுக்கார பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரும் முரளிதரன் குடும்பத்தின் எதனோல் மோசடி வியாபாரத்துக்கு உதவி புரிந்திருக்கின்றார்.

2) பியர் டின் தொழிற்சாலை
**********************
800 கோடி ரூபாய் வரையில் முதலீடு செய்து பியர் டின்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்தார். இந்த தொழிற்சாலை ஆரம்பித்த பின் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுமதியைப் பெறவில்லை என்ற பிரச்சினை எழுந்தது.

யுத்தம் முடிந்த பின் அரசாங்கம் பியரின் விலையைக் குறைத்தது. சில மின்சார மானியங்களை இரத்து செய்து, மின்சார கட்டணத்தை உயர்த்தியது. இதனால் கண்ணாடி போத்தல் உற்பத்தி நட்டத்தைச் சந்தித்ததுடன் பியர் டின் பாவனையும், பியரின் கொள்வனவும் இலங்கையில் அதிகரித்தது. முரளியின் இந்த தொழிற்சாலைக்கு அரசாங்க தரப்பினர் இப்படியாக ஆதரவும், அனுசரணையும் கொடுத்தார்கள்.

3) வாழைப்பழ உற்பத்தி – காடழிப்பு
****************************
முரளிதரன் குடும்பம் செய்ததிலேயே இது தான் பெரும் பாவச் செயல். அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் கூட்டுச் சேர்ந்து சோமாவதி தேசிய சரணாலயம், லுனுகமவேதர தேசிய சரணாலயம், மொனராகலை மாவட்டத்தில் யால தேசிய சரணாலயம், புந்தல பறவைகள் சரணாலயத்தை அண்டிய பகுதிகள் என மொத்தமாக 20,000 ஏக்கர் காடுகளை அழித்து வாழை பயிர்செய்கையைச் செய்ய ஆரம்பித்தார்கள்.

யுத்த காலத்தில் இந்த சரணாலயங்கள் இராணுவத்தின் பொறுப்பிலிருந்தது. யுத்தம் முடிந்த பின்னும் இராணுவத்தின் பொறுப்பிலேயே இந்த சரணாலயங்கள் வைத்திருக்கப்பட்டது.

பின்னர் இராணுவத்தால், இந்த நிலப்பகுதி முரளிதரனும் அவரது சகோதரர்களும் நடத்தும் லெட்ஸ்குரோ எனும் கம்பனிக்கு வழங்கப்பட்டது. இவர்கள் அமெரிக்க கம்பனியான டோல் புட்ஸ் கம்பனியுடன் இணைந்து வாழை பயிர்செய்கை செய்கின்றார்கள்.

இந்த கம்பனியில் முரளிதரனுடன் கிரிக்கெட் விளையாடிய பிரமோதய விக்ரமசிங்க என்பவரும் பங்குதாரராக உள்ளார். இவர் முன்பு ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினராக இருந்தார். கம்பனி ஆரம்பித்தவுடன் இராஜபக்ச தரப்புக்கு மாறினார்.

மொனராகலை மாவட்டம் அமைந்திருக்கும் ஊவா மாகாணத்தின் முதலமைச்சராகவும், கதிர்காமம் முருகன் ஆலயத்தின் அறங்காவலராகவும் இருந்த இராஜபக்சவின் மூத்த சகோதரரின் புதல்வர் சசிந்திர ராஜபச்ச முரளிதரனின் கம்பனிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினார். கதிர்காம ஆலயத்துக்குச் சொந்தமான 500 ஏக்கர் காணியையும் வாழை பயிரிடலுக்காகச் சட்டவிரோதமாகத் தாரை வார்த்திருந்தார்.

இப்பிரதேச மக்களின் காணிகளையும் உள்ளுர்வாசிகளை கொண்டு மோசடியாக வளைத்துப் போட்டிருந்தார்கள்.
மொனராகலை மாவட்டத்தில் வாழை பயிரிடலுக்குத் தேவையான நீரைப் பெறுவதற்காக வீகடவெவ எனும் ஒரு குளத்தை வளைத்துப் போட்டிருப்பதுடன், மாணிக்க கங்கையின் பெருமளவான நீரையும் பயன்படுத்துகின்றார்கள்.
சோமாவதி , லுனுகமவேதர சரணாலயங்கள் யானைகளும், இலங்கைக்கே உரியச் சிறுத்தைகளும், காட்டுப் பூனைகளும் வாழும் இடமாகும்.

இந்த பகுதிகள் அழிக்கப்பட்டதாலும், நீர்நிலைகள் அபகரிக்கப்பட்டதாலும் தண்ணீரும் , சாப்பாடும் இன்றி 80 வரையிலான யானைகள் இறந்து போனது.

யானைகள் உணவு தேடி வாழைத் தோட்டங்களுக்கு வந்ததால், இந்த பகுதியிலிருந்து 500 – 800 யானைகளை வேறு பகுதிகளுக்குக் கொண்டு போய் விட்டார்கள். சிறுத்தைகளும் இடம் பெயர்க்கப் பட்டிருக்கலாம். ஆனால் , அதுகுறித்த தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

சரணாலயங்களில் இருக்கும் விலங்குகள் மனித சஞ்சாரத்துக்குப் பழக்கப்பட்டிருக்கும். வறட்சி நிலவும் காலங்களில் சரணாலயங்களில் இருக்கும் விலங்குகளுக்கு உணவு கிடைக்கும் ஏற்பாடுகளும் செய்யப்படும்.

இப்படிப் பழக்கப்பட்ட யானைகளை வேறு காடுகளில் விடும் போது, அவை உணவுக்காக மனிதர்கள் வாழும் பகுதிக்குத் தயக்கமின்றி வரும். பின்னர் அந்த காட்டிலிருந்து ஏனைய யானைகளும் இதையே பழக்கமாக்கிக் கொள்ளும்.
இலங்கையில் அண்மைக்காலங்களில் யானை – மனிதர்கள் பிரச்சினைகள் அதிகரித்ததின் பின்னணி இது மாத்திரம் தான்.

அண்மைக்காலங்களில் மலையகப் பகுதிகளில் மனித வாழிடங்கள் நோக்கி சிறுத்தைகள் வருவது அதிகரித்திருப்பதுக்கும் இதுவே காரணமாக இருக்கவேண்டும். உணவுக்காகச் சிறுத்தைகள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு வருவது அரிதானது. இப்போது இது அசாதாரணமாக அதிகரித்திருக்கின்றது.

மேலும், இந்த சரணாலய பகுதிகளை வாழ்வாதாரத்துக்காக நம்பியிருந்த மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். வாழைத்தோட்டங்களின் பயன்படுத்தப்படும் இராசாயணங்கள் காரணமாக ஏராளமானோர் சிறுநீரக பிரச்சினைகளுக்கு ஆளாகி இருக்கின்றார்கள். குறித்த இரசயாணங்கள் காற்றில் பரவும் என்பதால் வெளிநாடுகளில் இரவு நேரங்களிலே விசிறப்படும். ஆனால், இந்த வாழைத்தோட்டங்களில் பகலிலேயே விசிறப்படுகின்றது.

இந்த பிரச்சினைகளால் மக்களின் எதிர்ப்பு வெளிக்கிளம்ப ஆரம்பித்தது. முரளிதரனின் பெயரும் அடிப்பட ஆரம்பித்தது. இந்த மக்கள் எதிர்ப்புக்கள் எழ ஆரம்பித்த கட்டத்தில் இராஜபக்ச தேர்தலில் தோல்வியடைந்தார். இதனால் இந்த காடழிப்பு வேலைகள் எல்லாம் நிறுத்தப்பட்டிருந்தது.

கோட்டாபாய சனாதிபதி ஆன பின், இப்போது இராணுவத்தைப் பயன்படுத்தி காடழிக்கும் வேலைகளை வேக வேகமாகச் செய்து வருகின்றார்கள்.

இந்த சரணாலயங்களில் ஒரு மரத்தை வெட்ட வேண்டுமாயினும் குறைந்தது 7 அரச திணைக்களங்களின் அனுமதியைப் பெற வேண்டும். இதுபோல் வாழை பயிர்ச்செய்கை செய்வதையும் இலங்கை சட்டங்கள் தடை செய்கின்றது.

இதையெல்லாம் தாண்டி முரளிதரன் குடும்பத்தால் இவ்வளவு மோசடி செய்வதுக்கு இராஜபக்ச குடும்பத்தின் அனுசரணையே காரணமாக இருக்கின்றது.

இதற்குப் பதிலாகத் தான் முரளிதரன் பேரினவாதத்துக்கு முட்டுக்கொடுத்து தமிழ் பேசும் மக்களின் தேசிய அபிலாசைக்கு எதிரான கருத்துகளைப் பரப்பி வருகின்றார்.

இப்படி நடப்பது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போன்றது. உலக பிரபலமான தமிழர் ஒருவர் மூலமே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைக்கு எதிராகச் செய்யப்படும் பிரச்சாரங்கள் அதிகமாகக் கவனத்தில் கொள்ளப்படும்.

அடுத்தது உள்ளூரில் இப்படி காடழிப்பது, மோசடி செய்வதுக்கு மக்கள் எதிராகப் போராடுவதை, முரளி சொந்த தமிழ் மக்களுக்கு எதிராகவே கதைக்கின்றார் என்ற காரணத்தைக் காட்டி அடக்கி விட முடியும்.

இராஜபக்சாக்களை பொறுத்தவரை முரளியைத் தமிழர்களுக்கு எதிராகக் கதைக்க வைத்து பேரினவாதத்தைத் திருப்திப் படுத்தியும் நடக்கும், அவர்களின் சுரண்டல் வேலைகளை எல்லாம் முரளியின் பெயரால் நடத்தியதாகவும் இருக்கும்.
முரளிதரன் அவர் கிரிக்கெட்டால் அடைந்த நட்சத்திர அந்தஸ்தையும், படைத்த சாதனைகளையும் இப்படி அடகுவைத்திருப்பது அவலத்திற்குரியது.

சிங்கள பேரினவாதத்தின் சமகால தத்துவாசிரியரான நலின்தசில்வா இதைப் பகிரங்கமாகவே மேடைகளில் கூறிவந்தார். முரளி, கருணா, கேபி போன்றவர்கள் தமிழர்களின் அரசியல் அபிலாசைக்கு எதிராகவும், சிங்கள பேரினவாதத்துக்குச் சார்பாகச் செயல்படுவதால், அவர்கள் செய்யும் எந்த மோசடி வேலைகளையும் கண்டுகொள்ளாமல் ஆதரவு கொடுக்க வேண்டுமென்றார்.

இப்போது முரளி ஏன் பேரினவாதத்துக்கு ஆதரவாகவும், தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எதிராகவும் குரல் எழுப்புகின்றார் என்பதை இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும்.

இந்த வேலையை இன்னும் சிறப்பாகச் செய்விக்கத் தான் இவரை வடமாகாண ஆளுநராக்கவும், பாராளுமன்ற உறுப்பினராக்கவும் முயற்சி செய்தார்கள். இவரின் இந்தியக் குடியுரிமை மற்றும் மனைவி குடும்பத்திலிருந்து வந்த எதிர்ப்பின் காரணமாக இவர் தேர்தலில் போட்டியிடவில்லை. இவரின் சகோதரர் போட்டியிட வைக்கப்பட்டார்.

முரளிதரன் குடும்பத்தின் மாபியா வேலைகள் பற்றிய மிகச் சொற்பமான தகவல்கள் தான் இவை.
முரளிதரனின் பெயர் இந்த விடயங்களில் அடிப்படும் போதெல்லாம், இராஜபக்ச குடும்பத்துக்கு நெருக்கமானவர்களால் நடத்தப்படும் தெரன தொலைக்காட்சியில் முரளிதரன் தமிழருக்கு எதிராகக் கருத்துச் சொல்லும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும்.

முரளிதரன் அவர்களின் குடும்பத்தின் வியாபார மோசடியைத் தொடர்வதற்காகத் தான் வலிந்து சென்று தமிழ் பேசும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களைக் கொச்சைப்படுத்தும் பிரச்சாரங்களைச் செய்து வருகின்றார்.

சிங்கள பேரினவாதமும் அவரை நன்கு பயன்படுத்துகின்றது. முரளியும் தாராளமாகப் பயன்பட்டுப் போகின்றார். அவரின் சகோதரர்கள் இல்லாவிட்டால் முரளி இந்த பிரச்சினைகளின் சிக்கி இருக்காமலிருந்திருக்கவும் கூடும்.

இப்போது முரளியை சமூகத்தில் கதாநாயகராக்கும் ஒரு வேலை அவசியமாகின்றது. முரளி ஊடாக நடத்தும் மோசடிக்கு எதிரான மக்களின் போராட்டங்களைத் திசை திருப்பல், சர்வதேச மட்டத்தில் தமிழர்களுக்குப் பிரச்சினை இல்லை என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தல், தமிழ் மக்கள் மத்தியில் விடுதலை போராட்டத்துக்கு எதிரான கருத்தைப் பிரச்சாரம் செய்தல் என முரளி பேரினவாதத்துக்குத் தங்க முட்டையிடும் ஒரு வாத்து.

இந்த வாத்திலிருந்து நிறை தங்க முட்டைகளை அறுவடை செய்ய விஜய்சேதுபதி போன்ற மக்கள் அங்கீகாரம் பெற்ற ஒரு நடிகரைக் கொண்டு (இவருக்குச் சிங்கள மக்களிடமும் வரவேற்பு உண்டு – அண்மைக்காலங்களில் இவரின் திரைப்படங்களை இராஜபக்ச ஆதரவு தெரன தொலைக்காட்சி அதிகமாக ஒளிபரப்பி வந்தது.) முரளியின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்குவது நிறையவே துணை செய்யும்.

இந்த திரைப்படத்தைச் சிங்களம் உட்படப் பல மொழிகளில் தயாரிக்க உள்ளார்களாம். திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதை எதிர்ப்பதால் விளம்பரம் கிடைக்கிறது என்று சிலர் வஞ்சகமாக வருத்தப்படுகின்றார்கள்.

உண்மையில் விஜய்சேதுபதி நடிப்பதாகச் சொல்லப்பட்டதால் தான் திரைப்பட முயற்சியிலிருந்த அரசியலுக்கான எதிர்ப்பு உருவானது.

முரளி கிரிக்கெட்டில் ஒரு சாதனையாளர் தான். ஆனால் எப்படி வாழக் கூடாது என்பதுக்கு நல்ல உதாரணமும் கூட!
(மலையகத்தில் இருந்து ஓர் குரல்)