பிள்ளையானிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்; ஆதரவாளர்கள் ஏமாற்றம்..!

0

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் பெரும் எதிர்பார்ப்புடன் நீதிமன்ற வளாகத்திற்கு வந்திருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் மீதான வழக்கு விசாரணை இன்று (19) மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இடம் பெற்றது.

மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. எனினும், கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாகவும் சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகள் சமூகம் அளிக்காத காரணத்தினாலும் எதிர்வரும் நவம்பர் மாதம் விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ‘நவம்பர் 2ம் , 10ம்,16ம் திகதி வரை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. வழக்கு விசாரணைக்காக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சந்திகாந்தன் உட்பட ஆறு பேரும் அழைத்து வரப்பட்டனர்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015 ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


புதிய அரசாங்கம் அமைந்ததும், சந்திரகாந்தன் விடுதலையாவார், அவரது விடுதலைக்காக வாக்களியுங்கள் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். எனினும், புதிய ஆட்சியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்டுள்ளது, அந்த கட்சி ஆதரவாளர்களை பெரும் விரக்திக்குள் தள்ளியுள்ளது.