முல்லைத்தீவு சட்டவிரோத மரக்கடத்தல் குழுவினர் ஊடகவியாலாளர்கள் மீது கொடூர தாக்குதல்..!

0

முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் சட்ட விரோதமாக தேக்கு மரங்கள் அறுக்கப்பட்டு இரகசியமாக இடம் பெறும் திருட்டு தொடர்பில் உண்மைத் தன்மையினை வெளிப்படுத்தி செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் இருவர் மீது சட்ட விரோத மரக் கடத்தல் கும்பல் தாக்குதலை நடத்தியுள்ளது.


முறிப்பு புகுதியில் தொடர்சியாக காடழிப்பு மற்றும் தேக்கு மரங்கள் சட்ட விரோதமான முறையில் கடத்தப்படுவதாக மக்கள் தெரிவித்து வந்துள்ள நிலையில் சட்ட விரோத செயற்பாட்டில் ஈடுபடும் கும்பல் ஒன்று இயங்கி வருக்கிறமையினை அறிந்த முல்லைத்தீவு மாவட்டத்தின் முதன்மை ஊடகவியாலாளர் ச.தவசீலன் மற்றும் க.குமணன் ஆகிய இரு ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


குறித்த பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தல் மற்றும் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்தவர்களே தடிகள் மற்றும் பொல்லுகளுடன் சுற்றி வளைத்து ஊடகவியலாளர்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர்.


குறித்த ஊடகவியலாளர்களிடம் இருந்த பணம், தங்கச் சங்கிலி ஆகியவற்றை கடத்தல் கும்பல் கைப்பற்றியுள்ளதுடன் ஊடகவியலாளர்களிடம் இருந்த கமெராக்களை பறித்து அவர்களிடமிருந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளையும் பறித்து எடுத்துள்ளனர்.


எனவே கடந்த காலங்களில் காணப்பட்ட ஊடக அடக்குமுறை போன்று அல்லாது தற்போது பதவியில் உள்ள அரசாங்கம் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உடன் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்.