சுய தனிமைப்படுத்தலில் இருந்த நபர் திடீர் மரணம்; கொரோனாவா எனச் சந்தேகம்..!

0

கொரோனா நோயாளியுடன் பேருந்தில் தனது புதல்வி பயணித்ததால், சந்தேகத்தின் பேரில் மொனராகலை மெதகம பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டிருந்த ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.

மொனராகலை பொல்கல்ல -வல்கொல்ல பிரதேசத்தை சேர்ந்த 70 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மொனராகலை மருத்துவமனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கொழும்பில் இருந்து மொனராகலை வரை தனியார் பேருந்தில் பயணித்த பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது கடந்த 4 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டது.

உயிரிழந்த நபரின் புதல்வியும் இதே பேருந்தில் பயணித்துள்ளதாக கண்டறியப்பட்டது.

பின்னர் சுகாதார அதிகாரிகள், முழு குடும்பத்தையும் அவர்களின் வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி இருந்தனர்.


இந்த நிலையில் வீட்டில் தனிமைப்பட்டிருந்த 70 வயதான நபருக்கு நேற்றிரவு 7 மணியளவில் திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளதுடன் அவர் மொனராகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் உடலை காலி கராப்பிட்டிய மருத்துவமனைக்கு மாற்ற மொனராகலை மருத்துமனை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.


உயிரிழந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதா என்பதை கண்டறிய PCR பரிசோதனை நடத்தவே உடல் காரப்பிட்டிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.