பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களின் உலக அஞ்சல் தின வாழ்த்து செய்தி..!

0

1874ஆம் ஆண்டு ஒக்டோபர் 09ஆம் திகதி வரலாற்று சிறப்புமிக்க பேர்ன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் ஊடாக ஆரம்பிக்கப்பட்ட ஜெனரல் போஸ்டல் யூனியன் (General Postal Union) அமைப்பு, 1878இல் அனைத்துலக அஞ்சல் ஒன்றியமாக (Universal Postal Union-UPU) மாற்றப்பட்டது.


சர்வதேச மாநாட்டில் 1874ஆம் ஆண்டு தபால் ஒன்றியம் நிறுவப்பட்டதுடன், அதற்கான உரிய திகதியொன்று இல்லாமை வெளிப்படையானது. அதனால் பேர்ன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட ஒக்டோபர் 09ஆம் திகதியை அனைத்துலக அஞ்சல் தினமாக பிரகடனப்படுத்துவதற்கு, 1969ஆம் ஆண்டு டோக்கியோவில் இடம்பெற்ற சர்வதேச மாநாட்டின் போது தீர்மானிக்கப்பட்டது. 1984ஆம் ஆண்டு ஹெம்பேர்க் மாநாட்டில் அனைத்துலக அஞ்சல் தினம், உலக அஞ்சல் தினமாக (World Post Day) பிரகடனப்படுத்தப்பட்டது.


1798இல் ஒல்லாந்தர்கள் தமது ஆட்சி காலத்தில் கடலோர பகுதிகளில் முதலாவது அஞ்சல் அலுவலகம் அமைத்தல் மற்றும் 1799இல் முதன்முறையாக அஞ்சல் விதிமுறைகளை வெளியிடுதலுடன் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை அஞ்சல் சேவைக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலான நீண்ட வரலாறு காணப்படுகிறது.

தொழில்நுட்ப மற்றும் நிதி வரையறைகள் இன்றி மிகவும் நெருங்கிய மற்றும் மலிவு விலையில் தகவல் தொடர்பு சேவைகளை வழங்கும் அஞ்சல் சேவை குறித்து இன்னும் பெரும்பான்மையான மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இலங்கை அஞ்சல் சேவையால் மக்களுக்கு ஆற்றப்படும் சேவை அளப்பரியதாகும்.


ஆண்டுகள் தோறும் விரிவாக்கப்படும் அஞ்சல் சேவையினூடாக உலகின் பல்வேறு பிரதேசங்களில் வசிக்கும் மக்களிடையே தொடர்பாடல் மாத்திரமின்றி பொருள் கொடுக்கல் வாங்கல்களும் இடம்பெறுகிறது. பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து மக்களுக்கான சேவையை அஞ்சல் மூலம் வழங்குவதுடன், நவீன தொழில்நுட்பத்தினூடாக மிகவும் பயனுள்ள பல சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமை காலத்திற்கு உகந்ததாகும்.

இணைய வர்த்தகம் (e-commerce)> B- Post ஆகிய முறைகளின் ஊடாக வெளிநாடுகளிலிருந்து பொருட்களை பாதுகாப்பாக இந்நாட்டிற்கு கொண்டுவருதல், சிறு மற்றும் நடுத்தர வர்க்க வர்த்தகர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல் ஆகியவற்றின் மூலம் உள்நாட்டு தொழில்முனைவோருக்கு ஆற்றும் சேவை விசாலமானதாகும்.


இத்தகைய சூழலில் இலங்கை அஞ்சல், உலகளாவிய போக்குகள் மற்றும் மக்களின் தேவைகளை மிகவும் திருப்திகரமான முறையில் மேம்படுத்துவதற்கும், நவீனத்துவத்திற்கு ஏற்ப பல்வகைப்படுத்தப்படுவதற்கும் இந்த உலக அஞ்சல் தினத்தில் பிரார்த்திக்கிறேன்!.

மஹிந்த ராஜபக்ஷ,
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின்
பிரதமர்.