சில்க் ஸ்மிதாவைத் தேடும் தென்னிந்திய படக் குழு..!

0

தென்னிந்திய திரைப்பட உலகின் கவர்ச்சி நடிகையாக கொடி கட்டிப் பறந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு ‘அவள் அப்படித்தான்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகவுள்ளது.

80 மற்றும் 90 களில் தென்னிந்திய திரைப்பட இயக்குனர்களாலும் தயாரிப்பாளர்களாலும் தவிர்க்க முடியாத கவர்ச்சி நடிகையாக இருந்தவர் சில்க் ஸ்மிதா.

அவருக்கு முன்னால் பல கவர்ச்சி நடிகைகளை சினிமா உலகம் பார்த்து இருக்கிறது என்றாலும், தன்னுடைய மயக்கும் விழிகளாலும், வாளிப்பான உடல் கட்டினாலும் மொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கட்டிப் போட்ட ஒரு கவர்ச்சி நடிகை அவர்.


ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து சிறு வயதில் சாப்பாட்டிற்கே மிகவும் கஷ்டப்பட்ட விஜயலட்சுமி என்ற சில்க் ஸ்மிதா தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள் ஏராளம்.

கணக்கிலடங்கா திருப்பங்கள் நிறைந்த அவருடைய வாழ்க்கையை “அவள் அப்படித்தான்” என்ற பெயரிலே காயத்ரி பிலிம்ஸ் சித்ரா லட்சுமணனும், முரளி சினி ஆர்ட்ஸ் எச். முரளியும் இணைந்து தயாரிக்கின்றனர்.

பல விளம்பரப் படங்களை இயக்கியவரும் “கண்ணா லட்டு தின்ன ஆசையா” என்ற வெற்றிப் படத்தை இயக்கியவருமான மணிகண்டன் இந்தப் படத்தை இயக்குகிறார்.


“சில்க் ஸ்மிதாவின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் அவருடைய காந்தக் கண்கள். அப்படிப்பட்ட அழகான கண்கள் உடைய ஒரு அழகான பெண்ணை இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைப்பதற்காக தேடிக் கொண்டிருக்கிறோம்” என்கிறார் இப்படத்தின் இயக்குனரான மணிகண்டன்.

இப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் வரும் நவம்பர் மாதம் தொடங்க விருக்கிறது.

இதற்கு முன்னர் கடந்த 2011-ஆம் ஆண்டு ஹிந்தி மொழியில் தி டர்ட்டி பிச்சர் (The Dirty Picture) என்ற பெயரில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் வெளியானது.


மிலன் லுதிரா இயக்கிய இந்த திரைப்படத்தில் நடிகை வித்யா பாலன் சில்க் ஸ்மிதாவின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.