அனலைத் தீவில் புனரமைக்கப்பட்ட மீன்பிடி படகுத் துறை விக்னேஸ்வரனால் கையளிப்பு..!

0

அனலைதீவு கடற் தொழிலாளர் சங்க வேண்டு கோளிற்கமையவும் ஊர்காவற்துறை பிரதேச செயலாளரின் வழிகாட்டலுக்கு அமையவும் J/38 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த கடற் தொழிலாளர்கள் பயனுறும் விதமாக அனலைதீவு தெற்கில் புனரமைக்கப்பட்ட மீன்பிடி படகுத் துறை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.


மேற்படி மீன்பிடித் துறையை ஆழப்படுத்தல் திட்டமானது கடற் தொழிலாளர் சங்கத்தவர்களின் வேண்டுகோளிற்கிணங்க தமிழ் மக்கள் நம்பிக்கைப் பொறுப்பு செயற்குழுவின் செயலாளர் திரு.தவசெல்வம் சிற்பரன் அவர்களின் ஒழுங்கு படுத்தலுக்கமைய ரூபா. 5 இலட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டு மீனவர்களிடம் வைபவ ரீதியாக கையளிப்பு செய்யப்பட்டுள்ளது.


இந் நிகழ்வில் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், பேராசிரியர் வி.பி.சிவநாதன், திரு.தவச்செல்வம் சிற்பரன், மதகுருமார்கள், இளைஞர் அணி உறுப்பினர் திரு.சி.மதுசன், ஊர்காவற்துறை பிரதேச செயலக அதிகாரிகள், கடற்தொழிலாளர் சங்க உறுப்பினர்கள், அனலைதீவு பொது மக்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.


ஆபத்தான கடற் பாறைகள் நிறைந்த கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கு இது நாள் வரையில் பெரும் இன்னல்களையும் அசௌகரியங்களையும் அப் பிரதேச மீனவர்கள் சந்தித்து வந்துள்ளார்கள். இத் திடத்தின் பயனாக இனிவரும் காலங்களில் பாதுகாப்பான முறையில் அப் பிரதேச மக்கள் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முடியும் என கடற்தொழில் சங்கத் தலைவர் ஜோன் பொஸ்கோ அவர்கள் தெரிவித்தார்.