திலீபன் உங்களிற்கு பயங்கரவாதியாக இருக்கலாம்; அவர் எமக்கு தியாகியே..!

0

தியாகி திலீபன் உங்களிற்கு வேண்டுமானால் பயங்கரவாதியாக இருக்கலாம். ஆனால், எம்மை பொறுத்தவரை- தமிழ் மக்களிற்கு- அவர் தியாகி. தமிழ் மக்களிற்காகவே அவர் போராடி உயிர் நீத்ததாக கருதுகிறார்கள்.

இவ்வாறு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் முகத்தில் அறைந்தால் போல் யாழ் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்த பரபரப்பு சம்பவம் இடம் பெற்றுள்ளது.


இதன் போது, செய்தியாளர் ஒருவர் தியாகி திலீபன் நினைவேந்தல் தடை குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த கெஹலிய எகத்தாளமாக,

“திலீபன் ஒரு பயங்கரவாதி. அவரை நினைவுகூர அனுமதிக்க முடியாது. பின்லாடனை நினைவுகூர அமெரிக்கா அனுமதிக்கிறதா? இல்லையே. அது போலத்தான் திலீபனும் ஒரு பயங்கரவாதி. அவரை நினைவுகூர அனுமதிக்க முடியாது. இன்று திலீபனை நினைவுகூர கேட்பார்கள். நாளை எக்ஸ்ஐ நினைவுகூர, வையை நனைவுகூர கேட்பார்கள். அதற்கு அனுமதிக்க முடியாது“ என்றார்.

இதன் போது, எழுந்த யாழ்ப்பாண பல்கலைகழக ஊடக மாணவனும்- பத்திரிகைகளில் பயிற்சி மாணவனுமான ஒருவர்- “தியாகி திலீபன் உங்களிற்கு வேண்டுமானால் பயங்கரவாதியாக இருக்கலாம். ஆனால், எம்மை பொறுத்தவரை- தமிழ் மக்களிற்கு- அவர் தியாகி. தமிழ் மக்களிற்காகவே அவர் போராடி உயிர் நீத்ததாக கருதுகிறார்கள்“ என்றார்.


இதை மொழிபெயர்பாளர் மொழி பெயர்த்து சொன்ன போது, “இது அவரது கருத்து“ என்று விட்டு, கெஹலிய கப்சிப்பாக இருந்து விட்டார்.

இதேவேளை திலீபன் தொடர்பில் கீழ்த்தரமாக விமர்சித்த டக்ளஸ் தேவானந்தாவால் வடக்கில் ஈபிடிபி எதிர்வரும் தேர்தலில் பாரிய பின்னடைவை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.