மாகாண சபை முறைமை ஒரு போதும் நீக்கப்பட மாட்டாது; வாசுதேவ உறுதி..!

0

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இரத்து செய்வது தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் எவ்விதமான தீர்மானங்களையும் உத்தியோகப் பூர்வமாக எடுக்கவில்லை.

இனப் பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. மாகாண சபை முறை பலப்படுத்தப்படுமே தவிர ஒருபோதும் நீக்கப்படாது. என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தையும், மாகாண சபை முறைமையினையும் இரத்து செய்ய வேண்டும் என ஆளும் தரப்பினர் உறுப்பினர்கள் குறிப்பிடும் தனிப்பட்ட கருத்துக்களை அரசாங்கத்தின் கருத்தாக ஏற்றுக் கொள்ள முடியாது.

இனப் பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை அறிமுகம் செய்யப்பட்டது. மாகாண சபை முறைமை நடைமுறைப்படுத்தப் பட்டமையினால் ஒப்பீட்டளவில் ஒரு சில பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொள்ள முடிந்தது.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, மாகாண சபை தேர்தலை நடத்தினால் வடக்கு கிழக்கில் தனது கட்சி படுதோல்வியடையும் என்பதை நன்கு அறிந்து மாகாண சபை தேர்தலை நடத்தினார். வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் தங்களுக்கு தேவையான பிரதிநிதிகளை ஜனநாயக முறையில் தெரிவு செய்துக் கொண்டார்கள்.

தேர்தலில் தோல்வியடைவோம் என்பது குறித்து அப்போதைய அரசாங்கம் மாகாண சபை தேர்லை நடத்தாமல் இருக்கவில்லை. மக்களின் அடிப்படை உரிமை பாதுகாக்கப்பட்டது.


மாகாண சபை தேர்தல் உரிய காலத்தில் இடம் பெற்றிருந்தால் இன்று அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கும், மாகாண சபை முறைமைக்கும் எதிரான கருத்துக்கள் வெளியாகியிருக்காது.

மாகாண சபை பலப்படுத்தப்படுமே தவிர ஒரு போதும் அரசியல் காரணிகளுக்காக இரத்து செய்யப்பட மாட்டாது என்றார்.

இதேவேளை கயேந்திரர்களை தலைமையாக கொண்ட தமிழ் தேசிய முன்னணியினர் சிங்கள பெளத்த பேரினவாதிகளை திருப்திப்படுத்தும் வகையில் 13வது சரத்தை நீக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து வருகின்றனர் என்பதும் நோக்கத்தக்கது.