யாழில் திலீபன் நினைவேந்தல் தடை; நாளை ஒன்று கூடும் தமிழ் தேசிய கட்சிகள்..!

0

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை தடுத்து, வடக்கில் இராணுவ ஆட்சி பாணியிலான அணுகு முறையை அரசு மேற்கொள்வதை எவ்வாறு எதிர் கொள்வது என்பதை ஆராய யாழில் தமிழ் தேசிய கட்சிகள் கூடி ஆராயவுள்ளன.

இந்த முயற்சிக்கான முன்கையை, இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவே மேற்கொள்கிறார். தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி, அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்வது பற்றிய ஆலோசனை கூட்டத்திற்கு, கட்சிகளின் பிரதிநிதிகளிற்கு அவரே நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார்.


“தியாகி திலீபனின் நினைவேந்தலை வழக்கமாக தாயகமெங்கும் மக்கள் அனுட்டித்து வருகிறார்கள். இம்முறை தடையுத்தரவு நீதிமன்றம் மூலம் பெறப்பட்டுள்ளது. இது அரசாங்கத்தின் கொள்கை முடிவா அல்லது வடக்கு பாதுகாப்பு தரப்பு எடுத்து நடவடிக்கையா என்பது தெரியவில்லை. அதையும் ஆராய வேண்டும்.


அரசின் கொள்கை முடிவென்றாலும், பாதுகாப்பு தரப்பின் நடவடிக்கையென்றாலும் தமிழ் மக்களின் அஞ்சலி உரிமையை, தமிழ் சட்டத்தரணிகள் நீதிப் பொறிமுறையின் ஊடாகவே பெற்றுக் கொள்ள நடவடிக்கையெடுப்பது பற்றி ஆராயவுள்ளோம்.


அது தவிர, யாழ் மாநகரசபை எல்லைக்குள் நினைவேந்தலை தடைசெய்து நீதிமன்ற உத்தரவை பெற்றுள்ளார்கள். இது தொடர்பாக நாளை மதியத்தின் பின் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றாக கூடி ஆராயவுள்ளோம். தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் அனேகமான கட்சிகள் நாளை சந்திப்பில் கலந்து கொள்வார்கள்“ என்றார்.நாளைய சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் தரப்பு உள்ளிட்ட தரப்புக்கள் கலந்து கொள்வது இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.